விவசாயிகள் அதிகமான பண்ணைக் குட்டைகளை அமைக்க முன்வர வேண்டும் என்று ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் எஸ்.நடராஜன் வியாழக்கிழமை கூறினார்.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகம், ராமநாதபுரம் மாவட்ட வேளாண்மை அறிவியல் நிலையம் மற்றும் இந்திய வேளாண்மை ஆராய்ச்சிக் கழகம் ஆகியன இணைந்து ராபி முன்பருவ விழிப்புணர்வு விழாவை, குயவன்குடி வேளாண்மை அறிவியல் நிலையத்தில் நடத்தின. விழாவுக்கு தலைமை வகித்து மாவட்ட ஆட்சியர் எஸ்.நடராஜன் பேசியதாவது: ராமநாதபுரம் மாவட்டத்தில் 13,140 ஹெக்டேரில் நெற்பயிர்களும், 9,046 ஹெக்டேரில் தென்னை மரங்களும், 21,461 ஹெக்டேரில் மிளகாய் பயிர்களும், 4,243 ஹெக்டேரில் பயறு வகைகளும் சாகுபடி செய்யப்படுகின்றன. 4516 ஹெக்டேரில் நிலக்கடலையும், 4296 ஹெக்டேரில் பல்வேறு தானியங்களும், 1910 ஹெக்டேரில் கொத்தமல்லியும் பயிரிடப்பட்டுள்ளன. இவ்விழாவில் விவசாயிகளுக்கு வானிலை சார்ந்த அறிவுரைகள், வயல் வெளிகளில் ஆய்வு செய்தல், வறட்சியைத் தாங்கி வளரும் நெல் ரகம் குறித்த விளக்கம், பருத்தி, மிளகாய், பயறு, நிலக்கடலை ஆகியன சாகுபடி செய்யும் முறைகள், தென்னை உற்பத்தியை அதிகரிக்கும் முறைகள் குறித்த பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன.
ராமநாதபுரத்தில் மேலும் 2 ஆயிரம் பண்ணைக் குட்டைகளை அமைக்க முடிவு செய்துள்ளதால் விவசாயிகள் அதிகமாக அவற்றை அமைக்க முன்வர வேண்டும். பண்ணைக் குட்டைகளை அமைக்க விரும்புவோருக்கு உடனுக்குடன் அதற்கான அனுமதி அளிக்கப்படும். மாவட்டத்தின் மண் வளத்தில் தழைச்சத்தும், மணிச்சத்தும் குறைவாக உள்ளது. ஆனால் அதே நேரத்தில் சாம்பல் சத்து அதிகமாக உள்ளது. அதற்கேற்றவாறு தேவையான பயிர்களை சாகுபடி செய்து உரமிட வேண்டும். வறட்சிக்கு ஏற்றவாறு குறுகிய கால பயிர்களை பயிரிட வேண்டும் என்று அவர் பேசினார்.
முன்னதாக நவதானிய சத்துமாவு தயாரிக்கும் இயந்திரம், அது விற்பனை செய்யப்படும் விதம், விவசாயக் கழிவுகளை தூளாக்கும் இயந்திரம், அசோலா வளர்ப்பு ஆகியன வைக்கப்பட்டிருந்த கண்காட்சியையும் ஆட்சியர் பார்வையிட்டார்.
விழாவில் வேளாண் அறிவியல் மைய திட்ட ஒருங்கிணைப்பாளர் ஐ.சீகன்பால், வேளாண் பல்கலையின் விரிவாக்க கல்வி இயக்குநர் ஹெ.பிலிப் ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.வேளாண் அறிவியல் நிலைய உதவிப் பேராசிரியர் ம.சாந்தஷீலா நன்றி கூறினார்.
source : dinamani
No comments:
Post a Comment