சேதுபாவாசத்திரம், பேராவூரணி வட்டாரங்களில் சாலை ஓரங்களில் குவியலாக கிடக்கும் தென்னை நார்க் கழிவுகளை மக்கச்செய்து கம்போஸ்ட் உரமாக பயன்படுத்தலாம் என்று வேளாண் அதிகாரி அறிவுறுத்தியுள்ளார். இது குறித்து சேதுபாவாசத்திர வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் பெரியசாமி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது. கம்போஸ்ட் உரம் தயாரிக்க 100 கிலோ தென்னை நார்கழிவு 1 டன் புளூரோட்டஸ் காளான்வித்து 1 கிலோ, யூரியா 5 கிலோ எடுத்துக் கொள்ளவேண்டும். முதலில் தென்னை நார்கழிவை 5 மீ. -3 மீ. நீள அகலமுடைய மேடான நிலப்பரப்பில் சமமாக பரப்ப வேண்டும் ( சராசரியாக 4 முழுச்சாக்கு கொள்ளளவு கொண்டது). பின்னர் அதன் மேல் 200 கிராம் புளூரோட்டஸ் காளான் வித்துகளை சீராக பரப்ப வேண்டும். பின் அதன் மேல் தண்ணீர் தெளிக்க வேண்டும். பின்னர் அதன் மேல் 100 கிலோ தென்னை நார்கழிவை பரப்பி ஒரு கிலோ யூரியாவை சீராக தூவ வேண்டும். மீண்டும் அதன் மேல் நன்கு தண்ணீர் தெளிக்க வேண்டும். இதேபோல் நார்கழிவு, புளூரோட்டஸ் காளான் வித்து மற்றும் யூரியா ஆகியவற்றை 10 அடுக்குகள் வரும் வரை (ஒரு மீட்டர் உயரம் வரை) மாற்றி மாற்றி அடுக்கி ஈரம் காயாதவாறு தினமும் தண்ணீர் தெளித்து வர வேண்டும். 30 நாட்களுக்கு பிறகு இந்த கழிவானது கருப்பு நிறத்தில் மாறும். இதுவே கம்போஸ்ட் உரமாக பயிர்களுக்கு பயன்படுத்தக்கூடிய மிகச்சரியான தருணம் ஆகும். இந்த உரத்தால் தென்னை நார்கழிவில் உள்ள நார்ப் பொருட்கள் சிதைக்கப்பட்டு எளிதில் பயிருக்கு கிடைக்கும் சத்தாக மாறுகிறது, கரிமம், நைட்ரஜன் ஆகியவற்றின் விகிதாச்சாரம் 112-:1 லிருந்து 21:1 என்ற அளவிற்கு குறைக்கப்படுகிறது. இதனால் நைட்ரஜன் சத்து என்ற வீணாவது குறைந்த பயிருக்கு பெருமளவில் கிடைக்கிறது, தழைச்சத்தின் அளவு 0.26 சதத்திலிருந்து 1.06 சதமாக அதிகரிக்கிறது, மக்கிய கம்போஸ்டில் நுண் சத்துக்கள், முதன்மைச்சத்துக்கள் மற்றும் இரண்டாம் நிலை சத்துக்கள் அளவு அதிகமாக இருக்கும், இக்கம்போஸ்ட் உரமானது மானாவாரி நிலங்களும், களர் உவர் நிலங்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும், மண்ணின் பௌதீக மற்றும் வேதியல் தன்மைகளை பாதுகாக்கிறது, இந்த உரமானது நிலத்துக்கு சத்துக்கள் அளிப்பதுடன் மண்ணின் நீர்பிடிப்புத்திறனை அதிகரிக்கச் செய்கிறது, ஒரு ஏக்கருக்கு சாதாரணமாக 5 டன் தொழு உரம் இடும் இடத்தில் இக்கம்போஸ்ட் உரத்தினை 2 டன் இட்டாலே தொழு உரத்திற்கு இணையான மகசூலும், விளைபொருட்களின் தரமும், மண்ணின் வளமும் பாதுகாக்கப்படுவதுடன் சுற்றுச்சூழல் கேடும் தவிர்க்கப்படுகிறது. இந்த உரத்தினை தென்னை மற்றும் அனைத்து சாகுபடி பயிர்களுக்கும் பயன்படுத்தலாம். இவ்வாறு அவர் அந்த செய்திக் குறிப்பில் கூறியுள்ளார்.
Source : dinakaran
Source : dinakaran
No comments:
Post a Comment