Tuesday, February 23, 2016

விவசாயிகளுக்கு கல்வி சுற்றுலா: ஆத்மா திட்டத்தில் ஏற்பாடு


தஞ்சாவூர் கால்நடை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு விவசாய சுற்றுலா, தான்தோன்றிமலை பகுதி விவசாயிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து, கால்நடை மருத்துவ பல்கலை பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மைய தலைவர் வசந்தகுமார் அறிக்கை: கரூர் மாவட்டம், பண்டுதகாரன்புதூரில் உள்ள கால்நடை பல்கலை பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையம், தான்தோன்றிமலை வட்டார வேளாண்மை துறையுடன் இணைந்து, ஆத்மா திட்டத்தில் தான்தோன்றி வட்டாரத்தை சேர்ந்த, 50 விவசாயிகளுக்கு, ஒருங்கிணைந்த கால்நடை உற்பத்தி பற்றிய இரண்டு நாள் இலவச கல்வி சுற்றுலா ஏற்பாடு செய்துள்ளது. இது, வரும், 29, மார்ச், 1ம் தேதி ஆகிய நாட்களில் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில், தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாட்டில் அமைந்துள்ள கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையம், வல்லம் அருகில் அமைந்துள்ள கால்நடைகளுக்கான மூலிகை மருத்துவ ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மையம் மற்றும் இந்திய பயிர் பதப்படுத்துதல் தொழில் நுட்ப மையம் ஆகிய இடங்களுக்கு அழைத்து செல்லப்படுகின்றனர். கல்வி சுற்றுலாவின் போது கால்நடை உற்பத்தி, கால்நடைகளுக்கான மூலிகை மருத்துவ முறைகள், தீவன தயாரிப்பு, பசுந்தீவன உற்பத்தி மற்றும் பதப்படுத்துதல், அசோலா வளர்ப்பு, தூய்மையான பால் உற்பத்தி, மண் புழு உரம் தயாரித்தல், சாண எரிவாயு உற்பத்தி, மதிப்புக்கூட்டப்பட்ட கால்நடை சார்ந்த பொருட்கள் உற்பத்தி குறித்த புதிய தொழில் நுட்பங்கள் விளக்கப்படும். ஆத்மா திட்டத்தில், இலவசமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சுற்றுலாவில் கலந்து கொள்ள ஆர்வம் உள்ள தான்தோன்றிமலை வட்டாரத்தை சேர்ந்த விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்போர், முன்பதிவு செய்து கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.


Source : Dinamalar

No comments:

Post a Comment