நாடாளுமன்றத்தில் திங்கள்கிழமை தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் கிராமப்புற வளர்ச்சி மற்றும் விவசாயிகளின் நலன் ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வருமான வரி உச்ச வரம்பு உயர்வு குறித்த அறிவிப்புகள் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை. அதேவேளையில், வருமான வரி விதிப்பு விகிதங்களில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை.
எதிர் வரும் 2016-17-ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி திங்கள்கிழமை தாக்கல் செய்தார்.
பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு தாக்கல் செய்யப்படும் மூன்றாவது நிதி நிலை அறிக்கை இதுவாகும்.
இந்த முறை பெருநிறுவனங்களுக்கு பெரிய அளவில் சலுகைகள் எதுவும் வழங்கப்படாத போதிலும், தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையிலான அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்களின் விவரம்:
வரி விலக்குச் சலுகை: வாடகை வீட்டில் வசிப்போருக்கு வருமான வரி தாக்கல் செய்யும்போது அவர்களுக்கு வரி விலக்குச் சலுகையாக ரூ.24,000 வழங்கப்பட்டு வந்தது. அது, தற்போது ரூ.60 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.
ரூ.35 லட்சத்துக்கும் குறைவாக கடன் பெற்று முதல் முறையாக வீடு வாங்குபவர்களுக்கு கூடுதலாக ரூ.50,000 வருமான வரி விலக்குச் சலுகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆண்டு வருமானம் ரூ.5 லட்சத்துக்கும் குறைவாக இருப்பவர்களுக்கான வருமான வரி விலக்குச் சலுகை ரூ.2 ஆயிரமாக இருந்தது. பட்ஜெட்டில் அந்த வரம்பு ரூ.3 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.
தொழில் முதலீட்டுக்கு உகந்த சூழலை உருவாக்குவதற்காக புதிய நிறுவனங்களுக்கு விதிக்கப்படும் பல்வேறு வரி விதிப்புகளை ரத்து செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. ஆண்டுக்கு ரூ.50 கோடிக்கும் குறைவாக வசூலாகும் 13 வரி விதிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
விவசாயிகள் நலன்: நாட்டின் வளர்ச்சிக்கு முதுகெலும்பாகத் திகழும் விவசாயிகளின் வாழ்வை மேம்படுத்துவது அவசியம் என்று நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்தபோது கூறிய அருண் ஜேட்லி, வேளாண் துறைத் திட்டங்களுக்காக ரூ.44485 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்று அறிவித்தார்.
அடுத்த நிதியாண்டுக்குள் ரூ.9 லட்சம் கோடி விவசாயக் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
வரும் ஜூன் 1-ஆம் தேதி முதல் அனைத்து சேவை வரிகளுடனும் கூடுதலாக "கிருஷி கல்யாண்' (விவசாயிகள் நலன்) எனப்படும் 0.5 சதவீத உபரி வரி (செஸ்) வசூலிக்கப்படவுள்ளது. அந்தத் தொகையை விவசாயிகள் நலத் திட்டங்களுக்கு செலவிடப்படப் போவதாக பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஊரக மேம்பாடு மற்றும் உள்கட்டமைப்பு: கிராமப்புற மேம்பாடுக்காக பட்ஜெட்டில் ரூ.87,765 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்துக்காக ரூ.38,500 கோடி ஒதுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கிராமங்களில் வசிக்கும் ஏழைப் பெண்கள் 5 கோடி பேருக்கு சலுகை விலையில் சமையல் எரிவாயு இணைப்பு வழங்கப்படும் என்றும், அதற்காக ரூ.2,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதைத் தவிர சாலைத் திட்டங்கள் உள்பட உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்காக ரூ.2.21 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டுள்ளது.
புகையிலைக்கு கூடுதல் வரி: சிகரெட் உள்ளிட்ட புகையிலைப் பொருள்களுக்கு கூடுதலாக 5 சதவீதம் கலால் வரி விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல், கார்கள் உள்ளிட்ட வாகனங்களுக்கு, அடிப்படைக் கட்டமைப்பு மேம்பாட்டுக்காக 1 முதல் 4 சதவீதம் வரை கூடுதல் வரி (செஸ்) விதிக்கப்பட்டுள்ளது. பொதுத் துறை வங்கிகளை மேம்படுத்தும் நோக்கில் அவற்றில் மறு மூலதன முதலீடு செய்வதற்காக ரூ.25,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
திறன் மேம்பாடு: 76 லட்சம் இளைஞர்களுக்கு தேசியத் திறன் மேம்பாட்டு நிறுவனம் வாயிலாக பயிற்சி அளிக்கப்படும் என்றும், 1,500 பல்திறன் மேம்பாட்டு பயிற்சி நிறுவனங்கள் அமைக்கப்படும் என்றும் பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2018-ஆம் ஆண்டு மே 1-ஆம் தேதிக்குள் அனைத்து கிராமங்களிலும் மின்சார வசதி அளிக்கப்படும் என்று நிதிநிலை அறிக்கையில் உறுதியளிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.1 லட்சம் மதிப்பில் மருத்துவக் காப்பீடு வழங்கப்படும் என்ற அம்சமும் பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளது.
பட்ஜெட் தாக்கலின்போது பேசிய அருண் ஜேட்லி, "சரக்கு - சேவை வரி (ஜிஎஸ்டி) மசோதா மற்றும் நிறுவன திவால் மசோதா ஆகியவற்றை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவதற்கு மத்திய அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது; ஆதார் அட்டைக்கு சட்ட அந்தஸ்து வழங்கப்படும்' என்றும் அறிவித்தார்.
விலை உயர்வு
கார்கள், உள்நாட்டு தயாரிப்பிலான செல்லிடப்பேசிகள்.
சிகரெட், சுருட்டு, புகையிலை, பீடி, குட்கா.
கார்டுகள் மூலமான பணம் செலுத்துகை, விமானப் பயணம், உணவு விடுதிகளில் சாப்பிடுவது, சினிமா டிக்கெட்டுகள் உள்ளிட்ட சேவைகள்.
ரூ.1,000-க்கு மேல் மதிப்புடைய பிராண்டட் ரெடிமேட் ஆடைகள்.
தங்கம் மற்றும் வெள்ளி, அனைத்து விதமான நகைகள் (வெள்ளியை தவிர்த்து).
சுத்திகரிக்கப்பட்ட (மினரல்) குடிநீர், இனிப்பு சுவை கூட்டப்பட்ட சோடா, குளிர்பான வகைகள்.
ரூ.2 லட்சத்துக்கும் அதிகமான ரொக்கத்தில் வாங்கப்படும் பொருள்கள்.
அலுமினியத் தகடு, நெகிழிப் பைகள், சாக்குப் பைகள்.
கேபிள் கார் பயணம், லாட்டரி டிக்கெட்டுகள்.
சட்ட உதவிகள்.
விலை குறைவு
காலணிகள்.
சூரிய மின்சக்தி விளக்குகள், மின்சாரத்தில் இயங்கும் வாகனங்கள்.
அகண்ட அலைவரிசை இணைய தொடர்புக் கருவி (மோடம்),
தொலைக்காட்சி செட் டாப் பாக்ஸ், டிஜிட்டல் விடியோ பதிவுக் கருவி, கண்காணிப்பு கேமரா.
60 சதுர மீட்டர் பரப்பளவில் கட்டப்படும் வீடு.
ஓய்வூதியத் திட்டங்கள்.
மைக்ரோ ஓவன் அடுப்பு.
குளிர்பதனப் பெட்டிகளில் பயன்படும் பிரத்யேக பாத்திரங்கள், நாப்கின்கள்.
நாட்டுப்புறக் கலைஞர்களின் நிகழ்ச்சி.
பிரெய்லி பேப்பர்.
நீரிழிவு நோயாளிகள் பயன்படுத்தும் ஸ்டெர்லைஸ்டு டயலைஸர் சாதனம்.
பட்ஜெட் முக்கிய அம்சங்கள்
* தனிநபர் வருமான வரி விகிதத்தில் மாற்றமில்லை.
* முதல் முறையாக சொந்த வீடு வாங்குவோருக்கு கூடுதலாக ரூ.50 ஆயிரம் வரிச் சலுகை.
* உள்நாட்டில் கருப்புப் பணம் வைத்திருப்போர் அதனைக் கணக்கில் காட்ட 4 மாத கால அவகாசம்.
* வீட்டு வாடகை செலுத்துவோருக்கான வருமான வரி விலக்குச்சலுகை ரூ.24 ஆயிரத்தில் இருந்து 60 ஆயிரமாக அதிகரிப்பு.
* 2016-17-ல் நிதிப்பற்றாக்குறையை குறைப்பதற்கான இலக்கு 3.5 சதவீதம்.
* மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டத்துக்கு ரூ.38,500 கோடி ஒதுக்கீடு.
* 2018-ஆம் ஆண்டு மே 1-ஆம் தேதிக்குள் அனைத்து கிராமங்களிலும் மின்சார வசதி.
* தொழிலாளர் வருங்கால வைப்பு நிதித்திட்டத்தில் புதிதாக இணைபவர்களுக்கு முதல் 3 ஆண்டுகளுக்கு 8.33 சதவீத பங்களிப்பை அரசு அளிக்கும்.
* புதிதாகத் தொடங்கப்படும் தொழில்களுக்கு முதல் 3 ஆண்டுகளுக்கு 100 சதவீத வரி விலக்கு. எனினும் "மேட்' வரி மட்டும் செலுத்த வேண்டும்.
* ஆதார் அட்டை திட்டத்துக்கு சட்ட அங்கீகாரம் வழங்கப்படும்.
* உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரூ.2.21 லட்சம் கோடி ஒதுக்கீடு.
* வேளாண் துறைக்கு ரூ.44,485 கோடி. 5 ஆண்டுகளில் நீர்ப்பாசனத் திட்டத்துக்கு ரூ.86,500 கோடி.
* ஏழை மக்களுக்கு சமையல் எரிவாயு இணைப்பு வழங்க ரூ.2 ஆயிரம் கோடி.
* "ஸ்டார்ட் அப்' இந்தியா திட்டத்துக்கு ரூ.500 கோடி.
* சாலைகள், தேசிய நெடுஞ்சாலைகள் அமைக்க ரூ.55 ஆயிரம் கோடி.
* தூய்மை இந்தியா திட்டத்துக்கு ரூ.9,000 கோடி.
* உணவுப் பொருள் பதப்படுத்துதல் துறையில் 100 சதவீத அன்னிய நேரடி முதலீடு.
* பொதுத்துறை வங்கிகளில் மறுமூலதன முதலீட்டுக்கு ரூ.25 ஆயிரம் கோடி.
* பங்கு விலக்கல் துறை, இனி முதலீடு மற்றும் பொதுச் சொத்துகள் மேலாண்மைத் துறை என அழைக்கப்படும்.
* ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.1 லட்சம் மதிப்பில் மருத்துவக் காப்பீடு. மூத்த குடிமக்களுக்கு கூடுதலாக ரூ.30 ஆயிரத்துக்கு மருத்துவக் காப்பீட்டு வசதி.
* பீடி தவிர பிற சிகரெட் உள்ளிட்ட பிற புகையிலைப் பொருள்களுக்கு 10 முதல் 15 சதவீதம் கலால் வரி உயர்வு.
* நாடு முழுவதும் 3,000 மருந்தகங்கள் திறக்கப்படும்.
அனைத்து மாவட்டங்களிலும் டயாலிஸிஸ் மையம்.
source : Dinamani
No comments:
Post a Comment