'நீலகிரியில், 'சில்வர் டிப்ஸ்' தேயிலை உற்பத்தி மூலம், பல மடங்கு லாபம் கிடைக்கிறது' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணம் கொழிக்கும் தொழிலாக விளங்கிய நீலகிரி தேயிலை தொழில், விலை வீழ்ச்சியால் விமர்சனங்களுக்கு உள்ளாகி கிடக்கிறது. தேயிலை துாள் உற்பத்திக்கு, மூலப்பொருளாக விளங்கும் பசுந்தேயிலைக்கு, குறைந்தபட்ச விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என, விவசாயிகளும், விவசாய அமைப்புகளும் தொடர்ந்து குரல் எழுப்பி வருகின்றன.
மாறும் மனநிலை
நீலகிரியில், சிடிசி., ரக தேயிலை துாள் உற்பத்தியே அதிகளவில் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், சில்வர் டிப்ஸ், கிரீன் டீ உற்பத்திக்கான ஊக்குவிப்பு, சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. பெரிய கம்பெனி தேயிலை தொழிற்சாலைகள் மட்டுமே அத்தகைய தேயிலையை உற்பத்தி செய்து வந்த நிலையில், தற்போது சிறு தேயிலை விவசாயிகளும் சில்வர் டிப்ஸ், கிரீன் டீ உற்பத்தியில் ஈடுபட துவங்கியுள்ளனர்.
கடந்த காலங்களில், தேயிலை தர மேம்பாட்டு திட்டத்தின் கீழ், தரமான 'சிடிசி' ரக தேயிலை துாள் உற்பத்திக்குரிய பசுந்தேயிலையை சாகுபடி செய்வதற்கான தொழில் நுட்ப ஆலோசனைகளை வழங்கி வந்த, 'உபாசி' வேளாண் அறிவியல் நிலையம் (கே.வி.கே.,), தற்போது, சில்வர் டிப்ஸ், கிரீன் டீ உற்பத்திக்கு தேவையான பசுந்தேயிலையை சாகுபடி செய்வது தொடர்பான ஆலோசனைகளை வழங்கி வருகிறது. அதன் விளைவு, சில்வர் டிப்ஸ் தேயிலை உற்பத்தியில் சிறு விவசாயிகள் கவனம் செலுத்த துவங்கியுள்ளனர்.
மும்மடங்கு லாபம்
உபாசி கே.வி.கே., வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு; பேரார் மைனலை பகுதியில் உள்ள ஒரு விவசாயி, ஐந்து ஏக்கர் பரப்பளவில், சில்வர் டிப்ஸ் தேயிலை தயாரிப்பில் ஈடுபட்டு வருகிறார். கடந்த, 2013-2014, 2014--2015 என, இரு ஆண்டுகளில், 1,150 கிலோ சில்வர் டிப்ஸ் உற்பத்தி செய்தார். விற்பனை விலையாக, கிலோவுக்கு, 2,700 ரூபாய் கிடைத்தது. மொத்த வருமானமாக, 31 லட்சத்து 5 ஆயிரம் ரூபாய் ஈட்டப்பட்டுள்ளது.
உற்பத்தி செலவு, கிலோவுக்கு, 1,000 ரூபாய் மட்டுமே; நிகர லாபமாக, கிலோவுக்கு, 1,700 ரூபாய் கிடைத்துள்ளது. இரு ஆண்டுகளில், ஐந்து ஏக்கர் பரப்பளவில், மொத்தம், 19 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய் லாபம் ஈட்டப்பட்டுள்ளது. இவ்வாறு, செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Source : Dinamalar
No comments:
Post a Comment