Monday, February 29, 2016

குஜிலியம்பாறையில் விவசாய மையங்கள் உழவர் நிறுவன விழாவில் தகவல்


குஜிலியம்பாறையில் முருங்கை விவசாயிகளுக்கான "வளம் குன்றா' உழவர் உற்பத்தியாளர் நிறுவன துவக்க விழா மற்றும் பொதுக்குழு கூட்டம் நடந்தது.
குஜிலியம்பாறை பகுதியில் முருங்கை சாகுபடிக்கு முக்கியத்துவம் தரும் வகையில் ஆயிரம் விவசாயிகளை ஒருங்கிணைத்து "வளம் குன்றா உழவர் உற்பத்தியாளர்' நிறுவன துவக்க விழா நடந்தது. நிறுவன தலைவர் கோபால்சாமி தலைமை வகித்தார்.
சென்னை நபார்டு வங்கி பொது மேலாளர் மாலிக் முன்னிலை வகித்தார். கோவிலூர் பூஜா அறக்கட்டளை மேலாண்மை இயக்குநர் முருகேஸ்வரி வரவேற்றார்.
நிர்வாகிகள் மற்றும் அதிகாரிகள் பேசிதாவது: உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தில் தற்போது வரை 550 பேர் உறுப்பினர்களாக சேர்ந்துள்ளனர். மேலும் 450 உறுப்பினர்களை சேர்க்க முயற்சி எடுக்கப்படுகிறது. மத்திய, மாநில அரசுகளிடம் கூடுதல் நிதி பெற்று உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் மூலம் இரண்டு விவசாய மையங்கள் துவக்கப்பட உள்ளன. இம்மையங்களில் விவசாயிகளுக்கு தேவையான விதை, உரம், பூச்சி மருந்து மற்றும் பண்ணை இயந்திரங்களை குறைந்த வாடகைக்கு விடுதல் போன்ற சேவைகள் அளிக்கப்படும்.
மேலும் சேமிப்பு மற்றும் குளிர்ப்பதன கிட்டங்கிகள் அமைத்தல், விளை பொருட்களை நேரடியாக சந்தைப்படுத்துதல், வங்கிக் கடன் கிடைக்க வழிசெய்தல், விவசாயிகளுக்கு பூச்சி மேலாண்மை, சாகுபடி தொழில் நுட்பங்கள் அளிக்கப்பட உள்ளன, என்றனர்.
இதில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் கார்த்திகேயன், திருச்சி கனரா வங்கி துணைப்பொது மேலாளர் நல்லசிவம், திண்டுக்கல் நபார்டு வங்கி உதவி பொது மேலாளர் சஞ்சீவி, காந்தி கிராம வேளாண் அறிவியல் மைய திட்ட ஒருங்கிணைப்பாளர் உதயகுமார், திண்டுக்கல் கனரா வங்கி முதன்மை மேலாளர் தேவராஜ், வேளாண் அலுவலர் குமரவேல், பூஜா அறக்கட்டளை மேலாளர் மகேந்திரன் பங்கேற்றனர்.

Source : dinamalar

No comments:

Post a Comment