Sunday, February 28, 2016

புகையான் பூச்சிகள் தாக்கி நெற்பயிர்கள்... நாசம்:கட்டுப்படுத்த வேளாண் துறை ஆலோசனை


உத்திரமேரூர் ஒன்றியத்தில், நெற்பயிர்களை, புகையான் பூச்சிகள் நாசமாக்கி வருகின்றன. பூச்சிகள் தாக்கத்திலிருந்து, பயிர்களை காக்க, வேளாண் துறை, விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கி வருகிறது.
உத்திரமேரூர் ஒன்றியத்தில் உள்ள, விளை நிலங்களில், 60ல் இருந்து 70 சதவீதம் வரை, ஏரி நீர் பாசனத்தில், நெல் சாகுபடி செய்யப்பட்டு வந்தது. 2011- 14ம் ஆண்டு வரை, பருவ மழை பொய்த்ததால், ஏரி பாசன பரப்பு குறைந்தது.
இந்நிலையில், இரு மாதங்களுக்கு முன் பெய்த கனமழையால், அனைத்து ஏரிகளும் நிரம்பின. இதனால், உத்திரமேரூர் ஒன்றியத்தில், 70 சதவீத நிலத்தில், அதாவது, 16 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பில், நெல் பயிரிடப்பட்டுள்ளது.

கதிர்வரும் நிலையில், தற்போது, புகையான் பூச்சிகளின் தாக்கம், நெற்பயிர்களில் பரவலாக காணப்படுகிறது. இதனால், பெரும்பாலான பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன.மேலும், இந்த பூச்சியால், புல்தழை குட்டை, காய்ந்த குட்டை, வாடிய குட்டை ஆகிய நோய்கள் பரவுகின்றன.
புகையான் பூச்சிகளை கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து, உத்திரமேரூர் வேளாண் இணை இயக்குனர் அலுவலகம் வழங்கிஉள்ள ஆலோசனைகள்:

தாக்குதல் அறிகுறிகள்:
* வயலில், நீர் மட்டத்திற்கு மேல் இருக்கும் பயிரின் அடிப்பகுதியில், புகையான் பூச்சி இளங்குஞ்சுகளும், முதிர் பூச்சிகளும் ஒட்டியிருக்கும்
* தாக்கப்பட்ட பயிர்கள், முற்றிலும் காய்ந்து, வட்டமான திட்டுகளாக காணப்படும்
* பயிர்கள் கீழே சாய்ந்த நிலையில் காட்சிஅளிக்கும்.
கட்டுப்படுத்தும் முறை:
* தேவைக்கு அதிகமாக, தழைச்சத்து உரங்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்
* தேவைக்கு அதிகமாக, தண்ணீர் பாய்ச்சுவதையும் தவிர்க்க வேண்டும்
* நெல் பயிரிட்டுள்ள நிலங்களில், விளக்குப்பொறி அமைத்து, புகையான் பூச்சியை கவர்ந்து அழிக்கலாம்
* வயலில், நன்றாக தண்ணீர் வடிந்தபின், மருந்து தெளிக்க வேண்டும்
* 2.5 ஏக்கருக்கு, 15 லிட்டர் வேப்பெண்ணெய் அல்லது 30 லிட்டர் இலுப்பெண்ணெய் தெளிக்கலாம்.


பூச்சிக்கொல்லி மருந்துகள்
1. அசிமேட் 75%, sp 666, 2.5 ஏக்கருக்கு 1000 கிராம்
2. பியுப்ரோசன் 25%, sc 2.5 ஏக்கருக்கு 800 மி.லி.,
3. பாசலான் 35 ec, 2.5 ஏக்கருக்கு 1,500 மி.லி., மருந்து தெளிக்க வேண்டும்.
உத்திரமேரூர், வேளாண் விரிவாக்க மைய அலுவலர் ஒருவர் கூறியதாவது:
நெற்பயிர்களை தாக்கும் புகையான் பூச்சிகளை கட்டுப்படுத்தும் வழிமுறைகளை
கூறி வருகிறோம். பயிர்களை பாதுகாக்க, பயன்படுத்த வேண்டிய மருத்துகள் குறித்து அறிவுறுத்தி, ஆலோசனை வழங்கி வருகிறோம்.
மருந்துகளை, விரைவில், அரசு வேளாண் விரிவாக்க மையங்களில், வழங்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.

Source : Dinamalar

No comments:

Post a Comment