Monday, February 29, 2016

வேளாண் துறைக்கு ரூ.44,485 கோடி ஒதுக்கீடு:ரூ.9 லட்சம் கோடி வேளாண் கடன் வழங்க இலக்கு



மத்திய பட்ஜெட்டில் வேளாண் துறைக்கு ரூ.44,485 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்தத் தொகை, கடந்த ஆண்டு பட்ஜெட்டை (2015-16) ஒப்பிடும்போது இருமடங்கு அதிகமாகும். மேலும், எப்போதுமில்லாத அளவுக்கு 2016-17ஆம் நிதியாண்டில் ரூ.9 லட்சம் கோடி வேளாண் கடன் வழங்கவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, தனது பட்ஜெட் உரையில் மேலும் கூறியதாவது:
நாட்டின் முதுகெலும்பாக உள்ள விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, வரும் 2022ஆம் ஆண்டுக்குள் அவர்களின் வருமானத்தை இரட்டிப்பாக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, 2016-17ஆம் நிதியாண்டில் வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலன்சார்ந்த பல்வேறு திட்டங்களுக்கு மொத்தம் ரூ44,485 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
பிரதமரின் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்துக்கு ரூ.5,500 கோடியும், வேளாண் கடன் வட்டிக்கான மானியத்துக்கு ரூ.15,000 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், பருப்பு வகைகளின் உற்பத்தியைப் பெருக்க ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
வேளாண் நிலங்களுக்கான நீர்ப்பாசன வசதியை துரிதப்படுத்தும் திட்டத்தின்கீழ் (ஏஐபிபி) அடுத்த 5 ஆண்டுகளில் 89 திட்டங்கள் செயல்படுத்தப்படும். இவற்றில் 23 திட்டங்கள், அடுத்த நிதியாண்டுக்குள் நிறைவேற்றப்படும்.
முக்கியமாக, நீர்ப்பாசன வசதியை மேம்படுத்தும் நோக்கில், நபார்டு வங்கியின் மூலம் நீர்ப்பாசன நிதியம் விரைவில் ஏற்படுத்தப்படும். இதற்கு தொடக்க மூலஆதார நிதியாக ரூ.20,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
ஒருங்கிணைந்த வேளாண் சந்தை, வரும் ஏப்ரல் 14ஆம் தேதி தொடங்கப்படும். இதேபோல், 14 கோடி விவசாயிகளுக்கும் அடுத்த நிதியாண்டுக்குள் மண் தரப் பரிசோதனை அட்டை வழங்கப்படும் என்று அருண் ஜேட்லி தெரிவித்தார்.
நேரடி உர மானியத் திட்டம்: சமையல் எரிவாயு உருளைக்கான நேரடி மானியத் திட்டத்தைத் தொடர்ந்து, விவசாயிகளுக்கான உர மானியத்தையும் அவர்களது வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது; 2016-17ஆம் நிதியாண்டில், நாடு முழுவதும் சில குறிப்பிட்ட மாவட்டங்களில் பரிசோதனை முறையில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று அமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்தார்.

Source : Dinamani

No comments:

Post a Comment