Friday, February 26, 2016

வங்கிகள் மூலம் வேளாண்மை துறைக்கு ரூ.3 ஆயிரத்து 340 கோடி கடன் வழங்க இலக்கு கலெக்டர் தகவல்



தேனி
2016–17–ம் ஆண்டில் வங்கிகள் மூலம் வேளாண்மை துறைக்கு ரூ.3 ஆயிரத்து 340 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட கலெக்டர் வெங்கடாசலம் தெரிவித்தார்.
வங்கியாளர்கள் கூட்டம்தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 2016–17–ம் ஆண்டுக்கான வருடாந்திர கடன்திட்ட குறியீடு குறித்த வங்கியாளர்கள் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் வெங்கடாசலம் தலைமை தாங்கினார். பின்னர் வங்கி கடன் திட்ட அறிக்கையை கலெக்டர் வெளியிட கனரா வங்கியின் உதவி பொது மேலாளர் சந்திரசேகரன் பெற்றுக் கொண்டார்.
கூட்டத்தில் கலெக்டர் வெங்கடாசலம் பேசும் போது கூறியதாவது:–
2016–17–ம் ஆண்டில் மேற்கொள்ளப்பட இருக்கும் வருடாந்திர கடன் திட்டம் குறித்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. மாவட்டத்தின் முன்னேற்றத்தை கருத்தில் கொண்டும், சிறு, குறுந்தொழில்களின் மேம்பாட்டிற்காகவும், வேளாண் மற்றும் வேளாண் சார்ந்த தொழில்களுக்கு உரிய காலத்தில் போதுமான கடனுதவி வழங்கி அந்த தொழில்களை முன்னேற்ற பாதைக்கு அழைத்துச் செல்லும் வகையில் வங்கிகள் செயல்பட வேண்டும்.
கடன் வழங்க இலக்குஇந்த திட்ட அறிக்கையின் படி 2016–17–ம் நிதியாண்டில் ரூ.3 ஆயிரத்து 956 கோடி முன்னுரிமைக் கடனாக வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது கடந்த நிதியாண்டுக்கு நிர்ணயம் செய்யப்பட்டதை விட ரூ.359 கோடி அதிகமாகும். வேளாண்மைத் துறைக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் கடந்த நிதியாண்டை விட 10 சதவீதம் அதிகப்படுத்தி ரூ.3 ஆயிரத்து 340 கோடி கடனாக வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில், ரூ.1,608 கோடி பயிர்க்கடன் ஆகும்.
சிறு, குறுந்தொழில்களின் மேம்பாட்டுக்காக ரூ.240 கோடியும், இதர தொழில்களுக்கு ரூ.376 கோடியும் கடன் வழங்கிட திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இதனை விவசாயம், விவசாயம் சாராத மற்றும் வணிக ரீதியிலான தொழில்புரியும் பொதுமக்கள், ஏற்றுமதி தொழில் செய்பவர்கள், சமூக கட்டமைப்புகளை சார்ந்தவர்கள் பயன்படுத்திக்கொள்ளும் வகையில் அனைத்து வங்கி அலுவலர்களும் அவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு கலெக்டர் வெங்கடாசலம் கூறினார்.
இந்த கூட்டத்தில் மாவட்ட தொழில்மைய பொது மேலாளர் ராமசுப்பிரமணியன், தாட்கோ பொது மேலாளர் தங்கவேல், புதுவாழ்வு திட்ட மேலாளர் கழுகாசலமூர்த்தி, உதவி திட்ட அலுவலர் பால்ராஜ் மற்றும் அனைத்து வங்கிகளின் அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Source : Dailythanthi

No comments:

Post a Comment