உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் அமைத்துச் செயல்பட்டால் விவசாயிகளின் வாழ்வாதாரம் உயரும் என ஆலோசனைக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
சிதம்பரம் வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தில் பயறு வகைப் பயிர் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் அமைப்பதற்கான ஆலோசனைக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.
சென்னை வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை இணை இயக்குநர் க.இளங்கோ கூட்டத்துக்கு தலைமை வகித்து பேசுகையில், உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் அமைத்து செயல்படுவதால் விவசாயிகளின் வாழ்வாதாரம் உயரும். தமிழக அரசின் கொள்கைப்படி 2 மடங்கு உற்பத்தி, 3 மடங்காக உயரும்.
இத்திட்டத்தில் ஆயிரம் விவசாயிகள் ஒருங்கிணைந்து செயல்படுவதால் இடுபொருள்களை குறைந்த விலையில் பெற்று, உயர் சாகுபடி தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி உற்பத்தியைப் பெருக்க முடியும்.
மேலும் இடைத்தரகர்களைக் குறைத்து, பொருள்களை மதிப்புக் கூட்டி விற்பனை செய்வதன் மூலம் நேரடி விற்பனையில் ஈடுபட முடியும் என்றார்.
சிதம்பரம் கோட்ட வேளாண்மை அலுவலர் ச.அமுதா பங்கேற்று பேசியது: சிதம்பரம் கோட்டத்தில் உள்ள பரங்கிப்பேட்டை, புவனகிரி, கீரப்பாளையம், குமராட்சி, காட்டுமன்னார்கோவில் ஆகிய 5 டெல்டா வட்டாரங்களில் உளுந்து மற்றும் பச்சைப்பயறு சுமார் 50 ஆயிரம் ஹெக்டேர் பரப்பளவில் பயிரிடப்பட்டு, சராசரியாக 50 ஆயிரம் மெட்ரிக் டன் அளவுக்கு உற்பத்தி செய்யப்படுகிறது. இங்குள்ள விவசாயிகள் தங்களது விளை பொருள்களை, உள்ளூர் வியாபாரிகளிடம் சந்தை நிலவரத்தை அறிந்து விற்பனை செய்ய முடியாமலும், மிகக் குறைந்த விலையிலும் விற்றும் நஷ்டமடைகின்றனர்.
இதற்காகப் பயறு வகைப் பயிர் உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் அமைத்து, 1,000 சிறு, குறு விவசாயிகளை ஒருங்கிணைந்த கம்பெனி சட்டத்தின் கீழ் பதிவு செய்து ஒரு நிறுவனமாக செயல்பட வேண்டும்.
இதன்மூலம் விளைபொருள்கள் நேரடியாக சந்தை நுண்ணறிவுத் தகவல்களை அறிந்து விற்பனை செய்ய முடியும். விளைபொருள்களை மதிப்பு கூட்டி விற்பனை செய்வதன் மூலம் அதிக லாபமும் அடையலாம் என்றார். கடலூர் வேளாண் துணை இயக்குநர் வி.ஆறுமுகம் முன்னிலை வகித்துப் பேசினார். கூட்டத்தில் வேளாண்மை அலுவலர் சுரேஷ், உதவி வேளாண்மை அலுவலர்கள் ராயர், தனசேகர், ஆறுமுகம், ரமேஷ், முன்னோடி விவசாயிகள் விஜயக்குமார், ரவீந்திரன், சிவராஜ், ரத்தினசுப்பிரமணியன், செல்வராஜ், வேல்முருகன், ரமேஷ், குஞ்சிதபாதம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Source : Dinamani
No comments:
Post a Comment