எளிமையான முறையில் கறவை மாடுகளுக்கு தீவனப் பயிர் வளர்த்து ஓமலூரைச் சேர்ந்த வேளாண் பட்டதாரி வெற்றி கண்டுள்ளார்.
சேலம் மாவட்டம், ஓமலூர் அருகேயுள்ள இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி மகன் தினகரன் (30). வேளாண் பட்டதாரியான இவர், அந்த பகுதியைச் சேர்ந்த விவசாயிகளுக்கு பல்வேறு வேளாண் உற்பத்தி குறித்த ஆலோசனைகளை வழங்கி வருகிறார்.
கிராமப் பகுதிகளில் மாடுகள் வளர்ப்பதை போலவே, நகர் பகுதிகளிலும் கறவை மாடுகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. கிராமப் பகுதிகளில் மேய்ச்சல் நிலங்கள் அதிகமாக இருப்பதால், கிராமவாசிகள் தீவனத்துக்கு சிரமமில்லை. இருப்பினும், மழை இல்லாத காலங்களில் மாடுகளுக்கு தீவனத்தை விலைக்கு வாங்கியே கொடுக்கும் நிலை ஏற்படுகிறது. இதுபோன்ற நிலையைச் சமாளிக்கும் வகையில், வேளாண் பட்டதாரி தினகரன் தீவனப் பயிர் வளர்க்கும் எளிமையான முறையைக் கண்டுபிடித்துள்ளார். இதற்கு வீட்டில் ஏழு அடுக்குகள் கொண்ட ரேக் ஒன்றும், பிளாஸ்டிக் பிளேட்களும் தேவை. இந்த பிளேட்டில் நாம் மாட்டுக்கு கொடுக்க விரும்பும் பயிரை தீவனமாக வளர்க்க முடியும். இவர் இதன் மூலம் மக்காச்சோளப் பயிரை வளர்த்துள்ளார்.
இதுகுறித்து தினகரன் கூறியது: சுமார் ஒரு கிலோ மக்காச்சோள விதையை நன்றாக தண்ணீரில் ஊறவைக்க வேண்டும். பின்னர் அதை எடுத்து ஐந்தாகப் பிரித்து, ஐந்து பிளாஸ்டிக் பிளேட்களில் பரப்பி அதன்மீது ஈரமான துணியைப் போட வேண்டும். இந்த விதைகள் முளைக்க ஆரம்பித்து நன்றாக வளரும். அதன் வளர்ச்சி அடுத்தடுத்து வரும்போது, வேறு ரேக்குக்கு அந்த பிளேட்களை மாற்ற வேண்டும். இவ்வாறு செய்யும்போது, ஏழாவது நாளில் இந்த பயிர் மாடுகள் உண்ணும் அளவுக்கு சுமார் ஓர் அடி உயரத்துக்கும் மேலாக வளர்ந்து விடும். ஏழாவது அல்லது பத்தாவது நாள் வரைகூட வளர்த்து அந்த பயிரை அப்படியே முழுமையாக மாடுகளுக்கு தீவனமாகக் கொடுக்கலாம். அந்த அளவுக்கு நல்ல முறையில் பசுமையாகவும், அதன் தன்மை மாறாமலும் வளர்ந்து விடும்.
இதற்கு மண், உரம் எதுவும் தேவையில்லை. மேலும், இட வசதியும் அதிகமாக தேவையில்லை. குறைந்த அளவிலான இடத்திலேயே அதிக அளவிலான தீவனப் பயிர்களை வளர்க்க முடியும். இந்த முறையில் வளரும் விதையானது, வளர்ந்து பயிரானதும் அப்படியே வேருடன் மாடுகளுக்கு உணவாகக் கொடுக்கலாம். இதனால், மாடுகளுக்குத் தேவையான அனைத்து வகையான சத்துகளும் முழுமையாகக் கிடைப்பதால், மாடுகள் வழக்கத்தை விட அதிகமான பால் தரும். மேலும், இதேபோன்று ராகி, கம்பு, கொள்ளு, அவரை போன்ற பயிர்களையும் மாடுகளுக்குத் தீவனமாக வளர்த்துக் கொடுக்கலாம். இது எளிமையான தீவன வளர்ப்பு முறையாகும் என்றார். வேளாண் துறை அதிகாரிகள் வாய்ப்பு கொடுத்தால், இதுபோன்ற ஆலோசனைகள் மற்றும் பயிற்சியை விவசாயிகளுக்கு இலவசமாக செய்யவும், வேளாண்மை ஆலோசனைகள் வழங்கவும் தயாராக இருப்பதாக தினகரன் தெரிவித்தார்.
Source : Dinamani
No comments:
Post a Comment