Monday, February 1, 2016

நீலகிரி வனப் பகுதிகளில் நீர்ப்பிடிப்பு, மண் வள மேலாண்மை பயிற்சி முகாம் துவக்கம்


நீலகிரி மாவட்டத்தில் வனப் பகுதிகளிலுள்ள நீர்ப்பிரிவு முகடுப் பகுதிகளில் நீர்ப்பிடிப்பு மற்றும் மண் வள மேலாண்மை குறித்த 12 நாள்கள் பயிற்சி முகாம் உதகையில் திங்கள்கிழமை தொடங்கியது.
 கோவையிலுள்ள மாநில வனப் பணியாளர்களுக்கான மத்திய உயர்
பயிற்சியகத்தால் வழங்கப்படும் இப்பயிற்சி முகாமில் கேரளம் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களைச் சேர்ந்த 34 பயிற்சியாளர்கள் பங்கேற்றுள்ளனர். இவர்களுக்கு, நீர்ப்பிரிவு முகடுப் பகுதி மேலாண்மைத் திட்டத்தை செயல்படுத்து குறித்த திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிப்பதே இதன் நோக்கமாகும்.
 இதில், மண் பாதுகாப்பு, கட்டமைப்பு, வடிகால், ஓடைகள் பராமரிப்பு, மழைநீர் சேமிப்பு மற்றும் கழிவுநீர் கட்டமைப்பு போன்றவற்றிற்கான இடங்களைத் தேர்வு செய்தல், வடிவமைத்தல் போன்றவை குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது. மேலும், செயல்முறை விளக்கம், களப் பயிற்சி, இது தொடர்பான வடிவமைப்பு, செலவுகளை மதிப்பீடு செய்தல், திட்ட அறிக்கை தயார் செய்தல் குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது. இப்பயிற்சி பெறும் உதவி வனப் பாதுகாவலர்கள் குருத்துக்குளி, நஞ்சநாடு கிராமங்களிலுள்ள நீர்ப்பிரிவு முகடுப் பகுதிகளில் களப் பயிற்சியையும் மேற்கொள்வதோடு, நீர்ப்பிரிவு முகடுப் பகுதி மேம்பாட்டிற்கான மாதிரித் திட்ட அறிக்கையையும் தயார் செய்கின்றனர்.
 இப்பயிற்சி முகாமை உதகையிலுள்ள மத்திய மண் மற்றும் நீர்வளப் பாதுகாப்பு மையத்தில் திங்கள்கிழமை தொடங்கி வைத்த மலைப் பகுதி மேம்பாட்டுத்திட்ட இயக்குநர் ஸ்ரீனிவாச ரெட்டியுடன், மாநில வனப் பணியாளர்களுக்கான மத்திய உயர் பயிற்சி மையத்தின் பயிற்றுநர் இளங்கோ, மாவட்ட வன அலுவலர் பத்ரசாமி ஆகியோரும் பங்கேற்றனர். மத்திய மண் மற்றும் நீர்வளப் பாதுகாப்பு அமைப்பின் தலைவர்  ஓ.பி.எஸ்.சிங் கோலா தலைமையேற்ற இந்நிகழ்ச்சியில் மையத்தின் முதன்மை விஞ்ஞானி மணிவண்ணன் இப்பயிற்சியின் நோக்கம் குறித்து விளக்கினார்.


Source : Dinamani

No comments:

Post a Comment