தென்னையில் கருந்தலைப்புழு தாக்குதலை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து, கிருஷ்ணகிரி வேளாண்மை இணை இயக்குனர் சபா நடேசன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து வேளாண் இணை இயக்குனர் சபா நடேசன் கூறியதாவது: தென்னை மரத்தை தாக்கும் கருந்தலைப்புழுவின் இளம் புழுக்கள் பச்சைக்கலந்த பழுப்பு நிற உடலையும், கரும்பழுப்பு நிற தலையையும் உடையதாக இருக்கும். இப்பூச்சி தாக்குதலை உழவியல் முறைகளை கடைபிடிப்பதன் மூலம் கட்டுப்படுத்தலாம். தாக்கப்பட்ட ஓலைகளை கோடைக்காலம் துவங்கும் முன் வெட்டி எடுத்து அழித்து விட வேண்டும். பெத்திலிட் மற்றும் பிராக்கானிட் என்ற குடும்பங்களைச் சார்ந்த ஒட்டுண்ணிகள், இலைகளின் அடிபாகத்தில் விடுவதால், புழுக்கள் கட்டுப்படுத்தப்படும். இவ்வகை ஒட்டுண்ணிகள் வேளாண்மைத்துறை மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. மேலும் இப்புழுக்களின் தாக்குதல் ஒட்டுண்ணிகளால் கட்டுப்படுத்த முடியாமல் அதிகரிக்கும் போது, ஓலையின் அடிப்பகுதிகளில் நன்கு படுமாறு டைக்குளோர்வாஸ் ரசாயன மருந்து தெளிப்பு செய்து கட்டுப்படுத்தலாம். தாக்குதல் தீவிரமாக இருக்கும் போது நன்கு வளர்ந்த புதிய வேரை தேர்வு செய்து, சிறிய அளவில் சரிவாக வெட்டி மோனோகுரோட்டோபாஸ், 10 மி.லிட்டருடன், 10 மி.லிட்டர் நீர் கலந்த கரைசல் இருக்கும் பாலிதீன் பையினில் வேர் பகுதி மூழ்குமாறு அமைத்து கரைசல் வேர் மூலம் உறிஞ்சப்படுவதை உறுதி செய்து, தாக்குதலை கட்டுப்படுத்தலாம். மேலும் தரையில் இருந்து, 1 மீட்டர் உயரத்திற்கு மரத்தின் தண்டு பகுதியில் துளையிட்டு 10 மி.லி., மோனோகுரோட்டோபாஸ் மருந்தை ஊசி மூலம் செலுத்தியும் இத்தாக்குதலை கட்டுப்படுத்தலாம். மருந்து உறிஞ்சப்பட்டவுடன், அத்துளையினை காப்பர் ஆக்ஸி குளோரைடு கலந்த களிமண் கொண்டு அடைத்துவிட வேண்டும். ஒட்டுண்ணிகள் விடப்பட்டிருந்தால், விடப்பட்ட நாளில் இருந்து, 21 நாட்களுக்கு பிறகே ரசாயன மருந்துகளை இட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
Source : Dinamalar
No comments:
Post a Comment