Sunday, February 14, 2016

உணவு கிடங்குகளில் மூலிகை விரட்டிகளை பயன்படுத்த நடவடிக்கை:உணவு கழக தமிழகக் குழுமத் தலைவர் தகவல்


நாடு முழுவதும் உள்ள மத்திய அரசின் உணவு கிடங்குகளில் பூச்சிகளை கட்டுப்படுத்த ரசாயனத்துக்கு பதிலாக மூலிகை விரட்டிகளைப் பயன்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக, இந்திய உணவுக் கழகத்தின் தமிழகக் குழுமத் தலைவர் திருச்சி சிவா கூறினார்.
சேலம் ஆண்டிபட்டி பகுதியில் உள்ள இந்திய உணவுக் கழகத்தின் உணவுப் பொருள் சேமிப்புக் கிடங்கில், உணவுக் கழகத்தின் தமிழகக் குழுமத் தலைவர் திருச்சி சிவா எம்.பி. ஆய்வு மேற்கொண்டார்.
உணவுக் கிடங்கில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த அரிசி, கோதுமை போன்ற உணவுப் பொருள்களின் தரத்தை அவர் ஆய்வு செய்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் திருச்சி சிவா கூறியது:
இந்திய உணவுக் கழகத்தின் சார்பில் உணவுப் பொருள்களைச் சேமித்து வைக்க தமிழகத்தில் மொத்தம் 57 கிடங்குகள் செயல்பட்டு வருகின்றன. இந்தக் கிடங்குகளில் பூச்சிகளைக் கட்டுப்படுத்த ரசாயன பூச்சிகொல்லி மருந்துகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
ஏற்கெனவே ரசாயனங்களைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் உணவுப் பொருள்களில் மேலும் ரசாயனங்களைக் கலப்பதைத் தவிர்க்க பரீட்சார்த்த முறைப்படி சேலம் கிடங்கில் தமிழகத்தில் விளையும் மூலிகைகளான வசம்பு, வேப்பிலை மற்றும் நொச்சி இலைகள் பூச்சி விரட்டிகளாகப் பயன்படுத்தப்பட்டன.
இந்த முறையானது நல்ல பலனைத் தந்துள்ளதால், இதனை தமிழகத்தில் உள்ள அனைத்துக் கிடங்குகளுக்கும் விரிவாக்கம் செய்வதுடன், மத்திய அரசிடம் பேசி இந்தியா முழுவதும் உள்ள அனைத்துக் கிடங்குகளிலும் மூலிகை பூச்சி விரட்டிகளைப் பயன்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும், இம் முறைக்கு கூடுதல் செலவு ஆனாலும், ஆரோக்கியத்துடன் ஒப்பிடும்போது செலவு என்பது இரண்டாம்பட்சம்தான். மத்திய அரசு, மாநில அரசுக்கு தரும் உணவுப் பொருள்கள் அனைத்தும் தரமானதாக உள்ளன.
மக்களிடம் தரமாகக் கொண்டு சேர்க்க வேண்டிய பொறுப்பு மாநில அரசின் உணவுபொருள் வழங்கல் துறையிடம்தான் உள்ளது.
தமிழகத்தில் உள்ள சில கிடங்குகளுக்கு நேரடியான ரயில் சேவை ஏற்பாடு செய்தால் போக்குவரத்து சிரமங்கள், பொருள் செலவுகள் குறையும். இது தொடர்பாக மத்திய ரயில்வே துறையிடம் பேசி ரயில் சேவை பெற நடவடிக்கை எடுக்கப்படும்.
மத்திய அரசு வழங்கும் உணவுப் பொருள்கள் கடத்தப்படுவதாகத் தகவல் கிடைத்தால் தலையிட்டு நடவடிக்கை எடுப்போம் என்றார்.

Source : Dinamani

No comments:

Post a Comment