Thursday, February 11, 2016

தஞ்சாவூரில் விவசாய சுற்றுலா திட்டத்துக்கு நல்ல வாய்ப்பு


தஞ்சாவூரில் விவசாயம் மற்றும் கிராமிய சுற்றுலா திட்டத்துக்கு நல்ல வாய்ப்புகள் உள்ளன என தஞ்சாவூர் சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் அண்மையில் நடைபெற்ற தேசிய கருத்தரங்கத்தில் குறிப்பிடப்பட்டது.
பல்கலைக்கழக மேலாண்மை துறை சார்பில் "கிராமிய மற்றும் விவசாய சுற்றுலா மூலம் தொழில்முனைவோருக்கான வாய்ப்புகள்' என்ற தலைப்பிலான கருத்தரங்கத்தில் புணே வேளாண் வணிக நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பாண்டுரங்க தவாரே பேசியது:
இந்தியாவிலேயே முதன்முதலாக, மகாராஷ்டிர மாநிலம், பாராமதி என்ற இடத்தில் கடந்த 2005 ஆம் ஆண்டில் விவசாய சுற்றுலா திட்டம் தொடங்கப்பட்டு,வெற்றிகரமாகச் செயல்பட்டு வருகிறது. தற்போது, மகாராஷ்டிரா மாநில வேளாண் சுற்றுலா 4 லட்சத்துக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகளைக் கவர்கிறது. இதன் மூலம் விவசாயிகள், சிறு வணிகர்கள், கைவினைக் கலைஞர்கள் பலரும் பயனடைந்துள்ளனர். கிராமங்களில் உள்ள பண்ணை விடுதிகளில் தங்குவது, மீன் பிடிப்பது, மாட்டு வண்டி, டிராக்டர் பயணம் மற்றும் பாரம்பரிய கிராமப்புற உணவுகளை உட்கொள்வது, நாட்டுப்புற நடனம்,இசை ஆகியவற்றை ரசிப்பது இதன் ஒரு பகுதி என்றார் பாண்டுரங்க தவாரே.
  இண்டிகோ ஓட்டல் குழுமத் தலைவரும், முதன்மை இயக்குநருமான ஸ்டீவ் போர்ஜியா பேசியது: தஞ்சை மாவட்ட கிராமங்களில் பல்வேறு சிறப்பு அம்சங்கள் உள்ளன. இவை அனைத்தையும் பலப்படுத்தி விவசாயச் சுற்றுலா மூலம் கிராமப்புற இளைஞர்கள், வணிகர்கள் உள்ளிட்டோர் பெருமளவில் பயனடையலாம் என்றார் அவர்.
பல்கலைக்கழக மேலாண்மைத் துறை முதன்மையர் வி. பத்ரிநாத் பேசியது: தஞ்சாவூர் மாவட்டத்தில் விவசாயம் மற்றும் கிராமிய சுற்றுலா வாய்ப்புகள் குறித்து கடந்த 6 மாதங்களாக கள ஆய்வு மேற்கொண்டு வருகிறோம். இத்திட்டத்துக்குத் தேவையான விவசாயம், கால்நடை, மீன், காய், கனி பண்ணைகள் ஆகியவை குறித்த ஆய்வறிக்கையை மத்திய,மாநில அரசுகளுக்கு அளிக்கவுள்ளோம். மேலும்,சாஸ்த்ரா பல்கலைகழக ஆய்வு மையம் மூலம் இத்திட்டத்தைச் செயல்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் பத்ரிநாத். தமிழ்நாடு சுற்றுலா மேம்பாட்டுத் துறைத் தலைவர் ராஜகோபால், தமிழ்நாடு சுற்றுலா வழிகாட்டி சங்கத் தலைவர் எஸ். முத்துக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Source : Dinamani

No comments:

Post a Comment