கரும்பு பயிரில் இரும்பு சத்துக்கான நுண்சத்து உரமிடுவதற்கும், நிலப்போர்வை அமைத்திடவும் தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் 50 சத அரசு மானியம் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. இதுகுறித்து திருவோணம் வேளாண்மை உதவி இயக்குநர் மதியரசன் தெரிவித்துள்ளதாவது: கரும்பு பயிர் சிற்சில இடங்களில் வெளிறிய பச்சை நிறத்துடன் பயிர் வளர்ச்சி குன்றி காணப்படும். இது இரும்பு சத்து பற்றாக்குறையின் அறிகுறியாகும். இது போன்ற இடங்களில் மகசூல் இழப்பு 50 சதம் வரை குறைய வாய்ப்புள்ளது. இக்குறைபாட்டினை போக்கிட பெர்ரஸ் சல்பேட் நுண்சத்து (இரும்புசத்து) இடுவது மிகவும் அவசியமாகும். இதற்கு ஒரு எக்டேருக்கு (21/2 எக்டேருக்கு) பெர்ரஸ் சல்பேட் நுண்சத்து 100 கிலோ இட வேண்டும். 100 கிலோ நுண்சத்து ஊட்ட உரத்தினை பார் அமைத்து கரும்பு கரணைகளை நடவு செய்த பின் தேவையான மணலுடன் கலந்து சீராக இட வேண்டும். இதனால் தரமான எடை நிறைந்த கரும்பு மகசூலாக கிடைக்கிறது. 100 கிலோ பெர்ரஸ் சல்பேட் நுண்ணூட்ட உரத்தின் விலை ரூ.950. இதில் 50 சதத்தொகை அரசு மானியமாக அனுமதிக்கப்படுகிறது. தனியார் உர விற்பனை மையத்தில் நுண்ணூட்ட உரத்தினை ரொக்க விலைக்கு பெற்று, மேற்படி ரொக்க ரசீது பட்டியலுடன் உங்கள் பகுதி வேளாண்மை உதவி அலுவலரை அணுகி முறையான மானிய விண்ணப்பம் பெற்று உரிய ஆவணங்களை வேளாண்மை விரிவாக்க அலுவலர்களிடம் ஒப்படைக்க வேண்டும். அலுவலக கூர்ந்தாய்வு மற்றும் பரிசீலனைக்கு பின்னர் 50 சத அரசு மானியம் விவசாயிகளின் வங்கி கணக்கில் பின்னேற்பு மானியமாக வரவு வைக்கப்படும். இத்திட்டத்தில் ஒரு விவசாயி இரண்டு எக்டேர் வரை மானியம் பெற வழி வகை செய்யப்பட்டுள்ளது. மேலும் கரும்பு தோகைகளை உரித்து தீயிட்டு எரித்து அழிக்கும் பழக்கம் பல இடங்களில் உள்ளது. அவ்வாறு செய்யாமல் தோகைகளை நறுக்கி, தூளாக்கி தரும் ஷெல்டர் எனும் கருவி மூலம் தோகைகளை தூள் செய்து அப்படியே நிலத்தில் இட்டு நிலப் போர்வை (மூடாக்கு) அமைக்கலாம். இவ்வாறு நிலப் போர்வை அமைப்பதால் மண்ணில் ஈரம் காக்கப்படுகிறது. பூச்சி, நோய்தாக்குதல் வெகுவாக குறைகிறது. அங்கக உயிரினங்களின் செயல்பாடுகள் ஊக்குவிக்கப்படுகிறது. கரும்பு மகசூல் 25 சதம் வரை கூடுதலாக கிடைக்கிறது. ஒரு எக்டேர் பரப்பில் நிலப்போர்வை மூடாக்கு அமைப்பதற்கு மொத்த செலவினத் தொகையில் 50 சதம் மானியமாக விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். இத்திட்டத்திலும் ஒரு விவசாயி 2 எக்டேர் வரை மானியம் பெற்று பயன் பெறலாம். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் குறிப்பிட்டுள்ளார்.
Source : Dinakaran
Source : Dinakaran
No comments:
Post a Comment