Monday, February 1, 2016

அடிப்படைக்கு உரமிடுவோம்

இந்தியா விவசாயம் சார்ந்த நாடு. விவசாயத் தொழிலில் சுமார் 50 சதவீதம் மக்கள் ஈடுபட்டுள்ளனர். நாட்டின் முன்னேற்றம் என்பது விவசாயத்தை அடிப்படையாகக் கொண்டது. விவசாய உற்பத்தி பொருள் ஏற்றுமதி ஆண்டுக்கு ரூ.2.57 லட்சம் கோடி அளவுக்கு உள்ளது. ஆனால், விவசாயிகள் வாழ்வில் முன்னேற்றம் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. நாட்டில் பல மாநிலங்களில் விவசாயிகள் தற்கொலை என்பது அன்றாட நிகழ்வாக இருக்கிறது. இதைத் தடுக்க வேண்டும் என்றால் விவசாய முன்னேற்றத்தில் அரசுகள் உண்மையான கவனம் செலுத்த வேண்டும். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு மத்திய அரசு திட்டத்தின்படி 2015க்குள் நமது நாட்டின் ஆண்டு உணவு உற்பத்தியை அப்போதைய நிலையில் இருந்து 210 மில்லியன் டன்னிலிருந்து 420 மில்லியன் டன்னாக அதிகரிக்க திட்டம் வகுக்கப்பட்டது. ஆனால், இந்த அளவுக்கு உணவு உற்பத்தியை எட்ட முடியவில்லை. 

இதற்கு பல காரணங்கள் உள்ளன. விவசாயம் செய்யும் நிலத்தின் பரப்பு குறைந்தது, போதுமான பாசன வசதி இல்லாதது என்று பட்டியல் நீள்கிறது. குறிப்பாக விவசாயிகள் விளைவிக்கக் கூடிய பொருள்களுக்கு கட்டுபடியாகக் கூடிய விலை கிடைக்கவில்லை இதனால், விவசாயத்தில் ஆர்வம் குறைந்து வாழ்வாதாரத்துக்கு மட்டுமே விவசாயம் செய்யும் நிலை கிராமங்களில் உள்ளது. இந்தநிலையில், பிரதமர் மோடி தனது வானொலி உரையில், “கடந்த மாதம் அறிமுகம் செய்யப்பட்ட பிரதமரின் பயிர் காப்பீடு திட்டம் குறித்து விவசாயிகளிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அடுத்த 2 ஆண்டில் பிரதமரின் வேளாண் காப்பீடு திட்டத்தில் 50 சதவீத விவசாயிகளை சேர்க்க வேண்டும்” என்று கூறியுள்ளார். பிரதமரின் இந்த திட்டம் பயன் அளிப்பதாக இருந்தாலும், விவசாயத்தை விட்டு வேறு வேலைவாய்ப்பைத் தேடி கிராமங்களிலிருந்து நகர் பகுதிக்கு குடியேறும் போக்கு அண்மைக்காலத்தில் அதிகரித்துள்ளது. இந்த நிலவரத்தை நகரின் மக்கள் தொகை பெருக்கத்தை வைத்து தெரிந்து கொள்ளலாம்.

விவசாயம் தொடர்ந்து சீரழிவைச் சந்தித்துக் கொண்டிருக்கும் நிலையில், அதை முன்னேற்ற வேண்டும் என்றால் ஒருங்கிணைந்த நடவடிக்கை தேவை. அதாவது, விவசாயத்துக்கு தேவையான பாசன வசதி, பயிர் விதைகள், உரங்கள் உள்பட விவசாய இடுபொருட்கள் குறைந்த விலையில் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். கரும்பு விவசாயிகள் கரும்புக்கு நியாயமான கொள்முதல் விலை கிடைக்காமலும் கரும்பு ஆலைகள் கோடிக்கணக்கில் நிலுவை தொகை வைத்திருப்பதையும் காணமுடிகிறது. 

இதேபோல், நெல், கோதுமை விவசாயிகளும் கொள்முதல் விலையை அதிகரிக்க போராடுவதைக் காண முடிகிறது. விவசாய விளை பொருள்களுக்கு கட்டுப்படியாகக் கூடிய விலை கிடைக்கச் செய்ய வேண்டும். இதுபோன்ற அடிப்படை தேவைகளை நிறைவு செய்யாமல் விவசாயத்தை முன்னேற்றுவது என்பது கானல் நீராகத்தான் இருக்கும். ஊர் நன்றாக இருந்தால் திருவிழா தானாகவே சிறப்பாகும். விவசாயத்தை வளர்த்தால் காப்பீட்டை அவர்களே பெற்றுக் கொள்வார்கள்.

Source : Dinakaran

No comments:

Post a Comment