Tuesday, February 2, 2016

வருமானம் அதிகரிக்க விவசாயிகள் கேழ்வரகு பயிரிடலாம் வேளாண்துறை ஆலோசனை

வருமானம் அதிகரிக்க கேழ்வரகு பயிரிடலாமென வேளாண் துறையினர் ஆலோசனை வழங்கி உள்ளனர்.
கேழ்வரகு பயிரிட கோ 9, கோ (ரா) 14, கோ 15, பையூர் (ரா) 2 ஆகியவை ஏற்ற ரகங்கள் ஆகும். ஆடி மற்றும் புரட்டாசி ஆகியவை கேழ்வரகு ஏற்ற பருவங்களாகும். நிலத்தை 2 முறை நன்கு உழவு செய்த பின்பு 3வது உழவில் தொழு உரம் இடவேண்டும். பொட்டாசியம் டை ஹேட்ரஜன் பாஸ்பேட் 20 கிராமுடன் 1 லிட்டர் நீர் கலந்த கரைசலில் விதைகளை 6 மணி நேரம் ஊறவைத்து உலர்த்திய பின் விதைக்க வேண்டும். நாற்றாங்கால் பயிரிட ஹெக்டேருக்கு 5 கிலோ விதையளவும் நேரடி விதைப்பிற்கு 10 முதல் 15 கிலோ விதைளவு வேண்டும்.

18 முதல் 21 நாட்கள் வயதுடைய நாற்றுகளை குத்துக்கு 2 அல்லது 3 நாற்றுகள் வீதம் 15*15 சென்டி மீட்டர் இடைவெளியில் நடவு செய்யலாம். பரிந்துரைக்கப்பட்ட உர அளவான தழை, மணி, சாம்பல் சத்துக்களை ஹெக்டேருக்கு முறையே 90:45:45 கிலோ என்ற அளவில் இடவேண்டும். 2 கிலோ அசோஸ் பைரில்லம் மற்றும் 2 கிலோ பாஸ்போ பாக்டீரியத்தை மக்கிய தொழு உரத்துடன் கலந்து 1 ஹெக்டேர் நிலத்தில் பயிரிடலாம். விதைத்த 18ம் நாள் ஒரு களையும், 45வது நாள் மற்றொரு களையும் எடுக்க வேண்டும். 1 ஹெக்டேருக்கு 2 லிட்டர் பியூட்டாகுளோர் களைக்கொல்லியை 500 லிட்டர் தண்ணீருடன் கலந்து நாற்று நட்ட 3ம் நாள் கைத்தெளிப்பான் கொண்டு தெளிக்க வேண்டும்.

கேழ்வரகை பூச்சிகள் பெரும்பாலும் தாக்குவதில்லை. எனினும், பருவ மாற்றத்திற்கு ஏற்ப வெட்டுப்புழுக்கள், தண்டு துளைப்பான்கள், சாறு உறிஞ்சுகள், வேர் அசுவினி முதலிய பூச்சுகள் தாக்கலாம். வெட்டுப்புழுக்களை கட்டுப்படுத்த மாலத்தியான் 200 மில்லி தண்ணீரில் கலந்து கொள்ள வேண்டும். தண்டு துளைப்பான்களை கட்டுப்படுத்த தூர்கட்டும் பருவத்திலும், பூக்கும் பருவத்திலும் இப்பூச்சிக்கொல்லியைப் பயன்படுத்தலாம். வேர் அசுவினியை கட்டுப்படுத்த டைமித்தோயைட் 0.03% கலவையை வேர்ப்பகுதியில் ஊற்ற வேண்டும். கதிர்கள் நன்கு காய்ந்து ஊற்றிய பிறகு அறுவடை செய்ய வேண்டும். இதுதொடர்பான கூடுதல் தகவல்கள் விவசாயிகள் அந்தந்த பகுதி வட்டார வேளாண் உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகலாமென வேளாண்துறையினர் தெரிவித்துள்ளனர். 

Source : Dinakaran

No comments:

Post a Comment