Thursday, February 18, 2016

இணையதள வேளாண் சந்தை:ஏப்.14-ல் தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி


நாட்டின் எந்த மூலையில் இருந்தும் விவசாயிகள் தங்களது உற்பத்திப் பொருள்களை நல்ல விலைக்கு விற்பனை செய்வதற்கு வசதியாக, வரும் ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி, "இணையதள வேளாண் சந்தை' தொடங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
 வரும் 2022-ஆம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருவாய் இரு மடங்காக அதிகரிக்கும் என்றும் அவர் உறுதியளித்தார்.
 மத்தியப் பிரதேச மாநிலம், சீஹோரில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் மோடி, சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட பயிர்க் காப்பீட்டுத் திட்டத்துக்கான வழிகாட்டும் நெறிமுறைகளை வெளியிட்டார். பின்னர் அவர் பேசியதாவது:
 பருவம் தவறிய மழை, வறட்சி ஆகியவற்றால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளின் நலனை உறுதிசெய்வதற்காக, பயிர்க் காப்பீடு, மண்வள அட்டைத் திட்டம், நீர்ப்பாசனத் திட்டம், இயற்கை விவசாயம் ஆகிய திட்டங்களை மத்திய அரசு தொடங்கியுள்ளது. 
 விவசாயிகள் கடினமாக உழைத்தாலும், தங்களின் விளைபொருள்களுக்கு உரிய விலை கிடைக்காததால், அவர்கள் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள். இதனால், அருகில் இருக்கும் ஏதாவது ஒரு மண்டியில் தங்களது விளைபொருள்களை விற்கும் நிலை ஏற்படுகிறது. இதுபோன்ற பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பதற்காக, இணையதளக் கட்டமைப்பு ஒன்றை ஏற்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
 அதற்காக, ""தேசிய வேளாண் சந்தை'' என்ற பெயரில் இணையதளம் ஒன்று உருவாக்கப்படும். அந்த இணையதளமானது, சட்டமேதை அம்பேத்கரின் பிறந்த தினமான, வரும் ஏப்ரல் 14-ஆம் தேதி, தொடங்கப்படும். 
 அந்த இணையதளம் வாயிலாக, விவசாயிகள் தங்களது செல்லிடப்பேசியைப் பயன்படுத்தியே, நல்ல விலை கிடைக்கும் பகுதிக்கு தங்களது விளைபொருள்களை விற்பனை செய்யலாம்.
 நாடு சுதந்திரம் அடைந்த 75-ஆவது ஆண்டு விழா, வரும் 2022-ஆம் ஆண்டு கொண்டாடப்படவுள்ளது. அந்த ஆண்டில், விவசாயிகளின் வருவாயை இரு மடங்காக உயர்த்துவதற்கு அனைத்து மாநில அரசுகளும், வேளாண் சமூகத்தினரும் உறுதியேற்க வேண்டும். அதற்கான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு அளிக்கும்.
 இதேபோல், நாடு முழுவதும் உள்ள 585 மொத்த விலை மண்டிகளையும், வரும் 2018-ஆம் ஆண்டுக்குள், இணையதளம் வாயிலாக ஒருங்கிணைக்கும் பணிகளை மத்திய அரசு தொடங்கியுள்ளது.
 விவசாயிகள், பாரம்பரிய வேளாண் அறிவையும், நவீன தொழில்நுட்பங்களையும் பயன்படுத்தி, விவசாயத் துறையை மேம்படுத்த வேண்டும். உள்ளூரின் தேவையை மட்டுமன்றி, வெளிநாடுகளின் தேவையையும் பூர்த்தி செய்யும் வகையில் விவசாயிகள் பாடுபட வேண்டும் என்றார் பிரதமர் மோடி.
 இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள் சுஷ்மா ஸ்வராஜ், ராதா மோகன் சிங், மத்தியப் பிரேதச முதல்வர் சிவராஜ் சிங் செளஹான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

Source : Dinamani

No comments:

Post a Comment