Thursday, February 18, 2016

அதிக மகசூல் தரும் மா!




திருநெல்வேலி: அதிக மகசூல் தரும் மா சாகுபடி செய்து பயன்பெறுமாறு விவசாயிகளுக்கு தோட்டக்கலைத் துறை வலியுறுத்தியுள்ளது.
 இதுதொடர்பாக, திருநெல்வேலி தோட்டக்கலை துணை இயக்குநர் டி.சி. கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
 மா சாகுபடியில் இந்தியா முதலிடம் வகிக்கிறது. உலகின் மொத்த சாகுபடியில் இந்தியா 50 சதவீதம் பூர்த்தி செய்கிறது.
 ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் மா மரங்கள் பூத்து, காய் பிடிக்கத் தொடங்கும். ஒரு லிட்டர் நீரில் 10 கிராம் பொட்டாசியம் நைட்ரேட் கலந்து தெளித்தால், பூக்காத மரங்களும் பூத்துக் காய்க்கும்.
 தத்துப் பூச்சிகள்: இப்பூச்சிகளின் குஞ்சுகள் மா பூக்கும் தருணத்தில் பூங்கொத்துகளின் சாறை உறிஞ்சுவதால் அவை வாடுவதுடன், சேதம் அதிகரிக்கும். மொட்டுகளும், பூக்களும் கருகி உதிரும். குஞ்சுகள் தேன் போன்ற திரவத்தைச் சுரப்பதால் இலை, பூங்கொத்துகளில் அதன் துளிகளைக் காணலாம். இத்திரவம் காரணமாக, கேப்னோடியம் எனும் பூசணம் பூங்கொத்துகளைத் தாக்கி, கருமையாக மாற்றி, உதிரச் செய்யும்.
 பாதுகாப்பு: மரத்தில் குறுக்கு நெடுக்காகவும், அடர்த்தியாகவும் உள்ள கிளைகளை ஆகஸ்ட், செப்டம்பரில் முறையாக கவாத்து செய்து பூக்கும் தருணத்தில் தத்துப்பூச்சி தாக்குதலை பெருமளவு குறைக்கலாம். 
 பூக்கும் தருணத்தில் தத்துப்பூச்சிகளைக் கட்டுப்படுத்த, பூங்காம்பு உருவாகும் தருணத்திலும், இரு வாரத்துக்கு பிறகும் மருந்து தெளிக்கலாம். ஒரு லிட்டர் நீருக்கு ஒன்றரை மில்லி பாசலோன் 35 ஈ.சி. மருந்துடன் 5 மில்லி வேப்பெண்ணெய் கலந்து தெளிக்க வேண்டும். 
 மறுமுறை 10 லிட்டர் நீரில் 3 மில்லி இமிடாகுளோபிரிட் 17.8 எஸ்.எல். மருந்துடன் 50 மில்லி வேப்பெண்ணெய் கலந்து தெளிக்க வேண்டும். 
 பூங்கொத்துப்புழு: இப்புழு பூ பூக்கும் தருணத்தில் பூங்கொத்துக்களில் கூடுபோல கட்டி மொட்டுகளைத் தின்று சேதப்படுத்தும். பாசலோன் 35 ஈ.சி. 2 மில்லி மருந்தை 1 லிட்டர் நீரில் கலந்து தெளித்து கட்டுப்படுத்தலாம். 
 மாங்கொட்டைக் கூன் வண்டு, பெண் கூன் வண்டு ஆகியவை மாம்பழப் பிஞ்சின் தோல் பகுதியில் வெட்டியெடுத்து அதில் முட்டைகளை இடுகின்றன. தோலில் சுரக்கும் பால்போன்ற திரவம் முட்டைகளை, வெட்டியெடுத்த பகுதியை மறைத்து விடும். புழுக்கள் குடைந்து சென்று விதைப் பகுதியினுள் கரும்பழுப்பு நிற வண்டாக மாறும். 
 இப்புழுக்கள் விதைப்பருப்பைத் தின்று சேதப்படுத்துவதால் காய்கள் பழுப்பு நிறத்தில் மாறி உதிரும். 
 மாந்தோப்புகளில் மரத்தின் கீழ் விழும் காய், கொட்டைகள், சருகுகளை சேகரித்து எரித்து விடவேண்டும். மாம்பிஞ்சுகள் பட்டாணி அளவில் இருக்கும்போது ஒருமுறை, 15 நாள்களுக்கு பிறகு ஒருமுறை என ஒரு லிட்டர் நீரில் 2 மில்லி என்ற அளவில் பென்தியான் 100 ஈ.சி. கலந்து தெளிக்கலாம். 
 பழ ஈக்கள் தாக்குவதால் மாம்பழம் வெளிர் மஞ்சள் நிறத்தில் இருக்கும். பெண் ஈக்கள் 5 முதல் 10 நீள் வெண் முட்டைகளை காய்களில் செருகி, முட்டையிலிருந்து வெளியாகும் புழுக்கள் சதைப்பகுதியைத் தின்று அழிக்கிறது. இதனால் தோலில் பழுப்பு நிறத் திட்டுகள் உருவாகி, நடுப்பகுதியில் கரும் புள்ளி தோன்றி பழம் அழுகி விடுகிறது.
 இடை உழவு செய்வதால் மரத்தைச் சுற்றி மண்ணில் உள்ள கூட்டுப் புழுக்களை அழிக்கலாம். ஒரு லிட்டர் நீரில் ஒரு மில்லி மிதைல் யூஜீனால், 2 மில்லி மாலத்தியான் 50 ஈ.சி. கலந்து கிடைக்கும் கரைசலில் ஒரு பாட்டிலில் 10 மில்லி வீதம் 5 அல்லது 6 அடி உயரத்தில் ஏக்கருக்கு 10 எண்ணிக்கையில் வைத்து தாய்ப் பழ ஈக்களைக் கவர்ந்து அழிக்கலாம்.
 வெம்பி விழும் பழங்களைச் சேகரித்து அழிக்கலாம். ஒரு லிட்டர் நீரில் 30 மில்லி வேப்பெண்ணெய் கலந்து தெளிக்கலாம்.
 மரத்தில் தாக்கும் மா தண்டுப்புழுவில், பெண் வண்டு தனது முட்டைகளை மரப்பட்டை அடியில் இடுகிறது. இப்புழுக்கள் மரத்தைக் குடைந்து சென்று சேதம் உண்டாக்குகிறது. 
 இவற்றை கம்பியால் குத்தி அழிக்கலாம். துளையில் 5 கிராம் கார்போபியூரான் 3 சதவீதம் குருணையை இட்டுக் களிமண்ணால் பூச வேண்டும். 5 செமீ அளவில் சதுர வடிவ மரப்பட்டையை நீக்கி, 10 மில்லி மானோகுரோட்டோபாûஸ பஞ்சில் நனைத்து மரப்பட்டையை வைத்துக் களிமண்ணால் பூச வேண்டும். ஆனால், காய்க்காத பருவத்தில்தான் இந்த யுக்தியைக் கையாள வேண்டும். விவசாயிகள் மாம்பழம் சாகுபடியில் ஒருங்கிணைந்த பயிர்ப் பாதுகாப்பு முறைகளைக் கடைப்பிடிப்பதன் மூலம் அதிக மகசூல் பெறலாம்.

Source : Dinamani
 
 

No comments:

Post a Comment