Tuesday, December 1, 2015

இயற்கை உரங்கள் மூலம் தேயிலை சாகுபடி மேற்கொள்ள நடவடிக்கை தோட்டக்கலைத்துறை இணை இயக்குனர் தகவல்

ஊட்டி,

இயற்கை உரங்கள் மூலம் தேயிலை சாகுபடி மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தோட்டக்கலைத்துறை இணை இயக்குனர் டாக்டர் ராம்சுந்தர் தெரிவித்து உள்ளார்.

கருத்தரங்கு

ஊட்டியில் இயற்கை உரங்கள் மூலம் விவசாயம் செய்வது குறித்த கருத்தரங்கு நேற்று நடைபெற்றது. கருத்தரங்கிற்கு விஞ்ஞானி டாக்டர் பெருமாள் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- 

தற்போது உலகம் முழுவதும் ரசாயன உரங்களை பயன்படுத்தி காய்கறிகள் விளைவிக்கப்படுகிறது. இதனால் விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டு வருகின்றன. மேலும் ரசாயன உரங்களை பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படும் விவசாய பொருட்களுக்கு நல்ல விலை கிடைப்பது இல்லை. எனவே தமிழகம் முழுவதும் உள்ள விவசாயிகளை இயற்கை வேளாண்மை திட்டத்தின் கீழ் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இயற்கை உரங்கள் மூலம் தேயிலை சாகுபடி

நீலகிரியில் உள்ள கிராமங்களில் உள்ள பெண்கள் இளம் தேயிலை கொழுந்துகளை வைத்து கிரீன் டீ உற்பத்தி செய்கின்றனர். இதற்கு நல்ல விலை கிடைத்து வருகிறது. இதேப்போல் ரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகள் ஆகியவற்றை பயன்படுத்தாமல் இயற்கை உரங்கள் மூலம் தயாரிக்கப்படும் கிரீன் டீக்கு இதை விட நல்ல விலை கிடைக்கும். மருத்துவ குணம் வாய்ந்த பழங்கள், காய்கறிகள் உற்பத்தி செய்தால் அவற்றுக்கு நல்ல விலை கிடைக்கும். எனவே இதுகுறித்து விவசாயிகள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் டாக்டர் ராம்சுந்தர் பேசும் போது, நீலகிரி மாவட்டத்தில் இயற்கையை பாதுகாக்கும் நோக்கத்தில் இயற்கை தேயிலை சாகுபடி திட்டம் உருவாக்கப்பட்டு உள்ளது. முதற்கட்டமாக எடக்காடு மற்றும் கக்குளா ஆகிய கிராமங்களில் 250 ஏக்கர் பரப்பளவில் இயற்கை உரங்கள் மூலம் தேயிலை சாகுபடி செய்யப்பட்டு, தேயிலை தூள் தயாரிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்கு தமிழக அரசு மானியம் வழங்கி வருகிறது என்று கூறினார்.

கீரைகள்

கருத்தரங்கில் தோட்டக்கலை ஆராய்ச்சி மைய முதன்மை விஞ்ஞானி செல்வராஜ் மற்றும் ஸ்வீடன் நாட்டு விஞ்ஞானி ஜோய்டின், மகேஷ் உள்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த இயற்கை விஞ்ஞானிகள், வேளாண்மை மாணவ-மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

மேலும் கருத்தரங்கில் இயற்கை உரங்கள் மூலம் விளைவிக்கப்பட்ட முள்ளங்கி, அத்திப்பழம், அஸ்பரஸ் மற்றும் பல்வேறு வகையான கீரைகள் கண்காட்சியில் வைக்கப்பட்டு இருந்தன. இதனை வெளிநாட்டு பயணிகள் உள்பட பலர் பார்வை யிட்டனர். 

Source : Dailythanthi

No comments:

Post a Comment