Friday, February 19, 2016

பண்ணைக் கழிவுகளை பயன்படுத்தி உரம் தயாரிப்பு: விவசாயிகளுக்கு அழைப்பு


பண்ணைக் கழிவுகளை பயன்படுத்தி கம்போஸ்ட் உரம் தயாரித்து பயன்பெற அனக்காவூர் வட்டார விவசாயிகள் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அனக்காவூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் ஏ.எம்.சாந்தி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
பண்ணைகளில் பல வகையான இலைச்சருகுகள், மாட்டுத் தொழுவ கழிவு, பயிர்க்கழிவுகள் உள்ளன. இவற்றை புளூரோட்டஸ் பூஞ்சானம் உதவியுடன் மக்கச் செய்து, எருவாக்கி மண்ணில் இடுவதால், மண் வளத்தைப் பாதுகாப்பது மட்டுமின்றி, பயிர் வளர்ச்சிக்குத் தேவையான பல ஊட்டச் சத்துகள் மண்ணில் சேர்க்கப்படுகின்றன.
தேவையான பொருள்கள்: பண்ணைக்கழிவு ஆயிரம் கிலோ, யூரியா 50 கிலோ, புளூரோட்டஸ் ஒரு கிலோ, சாணிப்பால் (20 கிலோ சாணம், 60 லிட்டர் தண்ணீர்).
செய்முறை: ஒரு டன் பண்ணைக் கழிவை 10 பாகங்களாகப் பிரித்து நிழலான மேட்டுப்பாங்கான இடத்தில் (5 மீட்டர் ஷ் 25 மீட்டர்) 100 கிலோ கழிவை படுக்கையாகப் பரப்பி, அதன் மேல் 200 கிராம் புளூரோட்டஸ் காளான்வித்தை சீராக இட வேண்டும்.
அதற்கு மேல் 100 பண்ணைக் கிலோ கழிவை பரப்பி 2 கிலோ யூரியாவை சீராக இட வேண்டும். அதன் மேல் தண்ணீர் மற்றும் சாணிப்பால கலந்து தெளிக்க வேண்டும்.
இதேபோல், பண்ணை கழிவு புளூரோட்டஸ் காளான்வித்து, யூரியா மற்றும் சாணிப்பால் இவற்றை 10 அடுக்குகள் வரும் வரை மாற்றி மாற்றி அடுக்கி ஈரம் காயாதவாறு தினமும் தண்ணீர் தெளித்து வரவேண்டும்.
15 நாள்களுக்கு ஒரு முறை நீர் தெளித்து நன்கு கிளறி விட வேண்டும். நன்கு மக்கிய கம்போஸ்ட் உரம் 8 வாரங்களில் தயாராகி விடும். இதனைப் பயன்படுத்தி நல்ல மகசூல் பெறலாம். மேலும், புளூரோட்டஸ் காளான்கிட் விவசாயிகளின் பயன்பாட்டுக்காக வேளாண்மை விரிவாக்க மையங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது என்று அந்த செய்திக் குறிப்பில் வேளாண்மை உதவி இயக்குநர் ஏ.எம்.சாந்தி தெரிவித்துள்ளார்.

Source : Dinamani

No comments:

Post a Comment