Monday, February 15, 2016

விதைநேர்த்தி செய்தால் அதிக மகசூல் பெறலாம்

நெற்பயிரில் விதைநேர்த்தி செய்வது அவசியம் என வேளாண் தொழில் நுட்ப முகாமில் வேளாண்மை அதிகாரி தெரிவித்தார்.
அரியலூர் ஒன்றியம் ராயம்புரம் கிராமத்தில் வட்டார வேளாண்மைத்துறை சார்பில் விரிவாக்க சீரமைப்பு திட்டம் மற்றும் அட்மா திட்டத்தில் நெல்லில் ஒருங்கிணைந்த பயிர் சாகுபடி குறித்து தொழில் நுட்ப மேலாண்மை முகாம் நடைபெற்றது. முகாமில் அட்மா திட்ட தொழில் நுட்ப மேலாளர் பழனிசாமி வரவேற்றார்.வேளாண் உதவி இயக்குனர் மோகன் தலைமை வகித்தார். வேளாண்மை அலுவலர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். முகாமில் சோழமதேவி கிரீடு வேளாண்மை அறிவியல் மைய தொழில் நுட்ப வல்லுனர்கள் ராஜா ஜோஸ்லின், ராஜ்கலா ஆகியோர் நெற்பயிரில் உள்ள தொழில் நுட்பங்களை விவசாயிகளுக்கு எடுத்துரைத்தனர். இதைத் தொடர்ந்து நடைபெற்ற முகாமில் அரியலூர் வேளாண்மை உதவி இயக்குனர் மோகன் பேசியதாவது: நெற்பயிரில் ஏற்ற பருவங்கள் மற்றும் அதன் ரகங்களை அறிந்து விவசாயிகள் பயிரிட வேண்டும், மேலும் இப்பயிரில் விதை நேர்த்தி செய்தல் என்பது அவசியமான ஒன்றாகும். இதன் மூலம் விவசாயிகள் அதிக மகசூல் பெறமுடியும், திருந்திய நெல் சாகுபடியில் நாற்றாங்கால் தயாரித்தல், நாற்றங்காலில் நீர் நிர்வாகம், விதை நேர்த்தி செய்தல் ஆகிய தொழில் நுட்பங்கள் இந்த முகாமில் விவசாயிகளுக்கு அனுபவமிக்க தொழில்நுட்ப வல்லுனர்கள் மூலம் செயல்விளக்கங்கள் வழங்கப்படுகிறது. மேலும் அடியுரம் இடுதல், இயந்திரம் மூலம் நடவு செய்தல், இலை வண்ண தழைச்சத்து நிர்வாகம், இயந்திரம் மூலம் அறுவடை செய்தல், நோய்தாக்குதல் மற்றும் விதை சேமிப்பு ஆகிய தொழில்நுட்பங்களுக்கான ஆலோசனைகள் 6 பண்ணைப் பள்ளிகளில் நடத்தப்படும். எனவே ஆதிக்குடிகாடு, சென்னிவனம், ராயம்புரம், காவேரிப்பாளையம் பகுதியை சேர்ந்த விவசாயிகள் பண்ணைப் பயிற்சி பள்ளிகளில் விவசாயிகள் பங்கேற்று பயன் பெற வேண்டும் என்றார்.

Source : Dinakaran

No comments:

Post a Comment