Thursday, February 18, 2016

அரவைக்காக 8 ஆயிரம் டன் நெல் வெளி மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது நுகர்பொருள் வாணிபக்கழக அதிகாரிகள் தகவல்



நடப்பு சம்பா பருவத்தில் இதுவரை அரவைக்காக 8 ஆயிரம் டன் நெல் வெளி மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக நுகர்பொருள் வாணிபக்கழக அதிகாரிகள் கூறினர்.

சம்பா பருவம்

காவிரி டெல்டா மாவட்டங்களில் ஒன்றாக விளங்கும் திருவாரூர் மாவட்டத்தில் சம்பா பருவம் முடிவடையும் தருவாயில் உள்ளது. மாவட்டம் முழுவதும் வயல்களில் அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், கொள்முதல் நிலையங்களில் விவசாயிகள் தாங்கள் விளைவித்த நெல்லை விற்பனை செய்து வருகிறார்கள். இதனால் நெல் கொள்முதல் அளவு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்த நிலையில் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல்லை, அரிசியாக மாற்றுவதற்காக வெளி மாவட்டங்களில் உள்ள அரிசி ஆலைகளுக்கு அனுப்பும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நேற்று திருவாரூரில் இருந்து 7-வது முறையாக நெல் அனுப்பும் பணி நடந்தது. இதில் திருப்பூர் மாவட்டத்திற்கு 950 டன் பொது ரக நெல் அரவைக்காக அனுப்பப்பட்டது.

இதையொட்டி திருவாரூரை சுற்றி உள்ள கொள்முதல் நிலையங்களில் இருந்து திருவாரூர் ரெயில் நிலையத்துக்கு 83 லாரிகளில் கொண்டு வரப்பட்ட 950 டன் நெல்லை சுமை தூக்கும் பணியாளர்கள் சரக்கு ரெயிலில் 21 பெட்டிகளில் ஏற்றி திருப்பூருக்கு அனுப்பி வைத்தனர்.

8 ஆயிரம் டன்

திருவாரூரில் நடப்பு சம்பா பருவத்தில் நடைபெற்று வரும் நெல் அனுப்பும் பணி குறித்து நுகர்பொருள் வாணிபக்கழக தர ஆய்வாளர்கள் கூறியதாவது:-

திருவாரூரில் இருந்து அரவைக்காக வெளி மாவட்டங்களுக்கு நெல் அனுப்பப்படுவது வழக்கம். நடப்பு சம்பா பருவத்தில் அரவைக்கு நெல் அனுப்பும் பணி கடந்த 3-ந் தேதி தொடங்கியது. இன்று (நேற்று) 7-வது முறையாக நெல் அனுப்பப்பட்டது. இவ்வாறு அனுப்பப்படும் நெல் அரவை செய்யப்பட்டு, பொது வினியோக திட்டத்தில் நியாய விலை கடைகளில் அரிசியாக வினியோகம் செய்யப்படும். நடப்பு சம்பா பருவத்தில் இதுவரை 8 ஆயிரம் டன் நெல் அரவைக்காக வெளி மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. சிவகங்கை, தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட மாவட்டங்களுக்கு நெல் அனுப்பப்பட்டு இருக்கிறது. இப்பணி தொடர்ந்து நடைபெறும்.

இவ்வாறு அதிகாரிகள் கூறினர். 

Source : Dailythanthi

No comments:

Post a Comment