Thursday, February 18, 2016

கோடை சீசனையொட்டி குன்னூர் காட்டேரி பூங்காவில் 1 லட்சம் மலர் நாற்றுகள் நடவு செய்யப்படும்



குன்னூர்
கோடை சீசனையொட்டி குன்னூர் காட்டேரி பூங்காவில் 1 லட்சம் மலர் நாற்றுகள் நடவு செய்யப்படும் என்று பூங்கா அதிகாரிகள் தெரிவித்தனர்.
காட்டேரி பூங்கா
குன்னூர்– மேட்டுப்பாளையம் சாலையில் காட்டேரி பூங்கா அமைந்து உள்ளது. தோட்டக்கலைத்துறைக்கு சொந்தமான இந்த பூங்கா சுமார் 5 ஏக்கர் பரப்பளவில் அமைந்து உள்ளது. கடந்த 2011–ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த பூங்காவில் பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ளன. இயற்கை சூழ்நிலையில் அமைந்துள்ள இந்த பூங்கா சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து உள்ளது.
ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் முதல் சீசனும், செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் 2–வது சீசனும் நிலவுகின்றன. புதிய மலர் நாற்றுகள் நடவு செய்யப்படுகிறது. இதன்படி ஏப்ரல், மே மாதங்களில் தொடங்கும் முதல் சீசனுக்கு மலர் நடவு செய்யும் பணி காட்டேரி பூங்காவில் தற்போது தொடங்கி உள்ளது. இதுகுறித்து பூங்கா அதிகாரிகள் கூறியதாவது:–
1 லட்சம் மலர் நாற்றுகள்கோடை சீசனையொட்டி மாவட்டத்தில் உள்ள பிற பூங்காக்களில் மலர்நாற்றுகளை நடவு செய்யும் பணி ஏற்கனவே முடிவுற்றுள்ளது. ஆனால் காட்டேரி பூங்காவின் சீதோஷ்ண நிலை மலர் நாற்றுகளின் வளர்ச்சிக்கு உகந்ததாக இருப்பதால் இந்த மாத இறுதிக்குள் மலர்நாற்று நடவு செய்யும் பணி முடிவு பெறும். தற்போது ரோஜா, டேலியா, சால்வியா, கார்னேசன் உள்ளிட்ட மலர் நாற்றுகள் நடவு செய்யப்பட்டு வருகிறது.
இதேபோல் ஜெர்மனி, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து ஆந்தோரியம், பிளாஸ், மேரிகோல்டு, பெட்டூனியா, பேன்சி உள்ளிட்ட வகைகளை சேர்ந்த மலர்கள் இன்னும் ஓரிரு நாட்களில் பூக்காவுக்கு வந்து விடும். பின்னர் காட்டேரி பூங்காவில் மொத்தம் 1 லட்சம் மலர் நாற்றுகள் நடவு செய்யப்படும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

source : Dailythanthi

No comments:

Post a Comment