Friday, February 12, 2016

நோயிலிருந்து காக்க கோ 49 நெல் பயிரிட மாற்று ஏற்பாடு ண தண்ணீர் இருந்தால் எந்த சீதோஷ்ணமும் தாங்கும்


டீலக்ஸ்' பொன்னி நெல் விளைச்சலில் குலை நோய் தாக்கம் அதிகமாக இருந்ததால், வரும் ஆண்டுகளில் இந்த ரகத்தை பயிரிட வேண்டாம், அதற்கு பதில் கோவை வேளாண் பல்கலை அறிமுகப்படுத்திய, கோ 49 ரகத்தை பயிரிட வேளாண்துறையினர் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.
சாக்கோட்டை ஒன்றியத்தில் இந்த ஆண்டு 6 ஆயிரம் எக்டேர் நெல் விவசாயம் மேற்கொள்ள இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, 4,500 எக்டேர் பயிரிடப்பட்டுள்ளது. 70 சதவீதம் டீலக்ஸ் பொன்னி ரகமே விளைவிக்கப்படுகிறது. கடந்த ஆண்டு 912 மி.மீ., மழை பெய்தது. இந்த ஆண்டு 868 மி.மீ., மழை பெய்துள்ளது. சராசரி அளவான 860-ஐ காட்டிலும் அதிகமே.
நிரம்பாத கண்மாய்கள் அனைத்தும் நிரம்பின. மடையிலிருந்து தண்ணீர் திறந்து விடும் நிலையிலோ, மோட்டார் மூலம் எடுப்பதற்கு வசதியாகவோ இருந்தது. நீர் இருப்பை பார்த்து விவசாயிகள், செப்டம்பர், அக்டோபரில் விதைப்பை மேற்கொண்டனர். தொடர் மழையால் தண்ணீர் பிரச்னையின்றி நெல் நாற்று செழித்திருந்தது.
ஜனவரியில் போதிய வெயில் இன்றி குளிர் வாட்டி வதைத்ததால், நெற் பயிர்களை நோய் தாக்கியது. கதிராக வேண்டிய பயிர் பதரானது.
எப்படியாவது காப்பாற்றி விடலாம் என்று விவசாயிகள்,வழக்கத்தை விட அதிக பூச்சி கொல்லிகளை அடித்தனர். இயற்கையின் கோரத்தில் நெல் நாற்று கருகி போனது. இதனால், இந்த ஆண்டு கோவை வேளாண் பல்கலை புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள கோ 49 ரக நெல் விவசாயத்தை மேற்கொள்ள வேளாண்துறையால் பரிந்துரைக்கப்பட உள்ளனர்.
வேளாண் அதிகாரி ஒருவர் கூறும்போது: டீலக்ஸ் ரகத்தை பொறுத்தவரை ஒரு நாள் மழை நான்கு நாள் நல்ல வெயில் என்றிருந்தால் மட்டுமே நோய் தாக்காது. தொடர் மழை பெய்தாலோ, குளிரடித்தாலோ நோய் தாக்க ஆரம்பித்து விடும்.
விதை கண்டு பிடித்து 10 ஆண்டுக்கும் மேலாகி விட்டதால், அதன் நோய் எதிர்ப்பு குறைவு. விவசாயிகள் இதை உணர்வது இல்லை. எனவே, இந்த ஆண்டு 135 நாளில் பலன் தரும் கோ 49 ரகத்தை பரிந்துரை செய்ய உள்ளோம். ஏக்கருக்கு 3 கிலோ விதை போதும். சன்ன ரகம். ஏக்கருக்கு 40 மூடை வரை கிடைக்கும். தண்ணீர் மட்டும் இருந்தால் எந்த சீதோஷ்ண நிலையிலும் பலன் தரக்கூடியது, என்றார்.

Source : Dinamalar

No comments:

Post a Comment