Wednesday, February 3, 2016

நான்கு ஆண்டுகளில் 32 லட்சம் பேர் பார்வை வேளாண் இணையத்தால் கிராம விவசாயிகள் பயன்


'அக்ரி போர்டல்' எனும் வேளாண் பல்கலை இணையதளத்தை, கடந்த நான்கு ஆண்டுகளில், 32 லட்சம் பேர் பார்வையிட்டுள்ளனர். இதன் வாயிலாக, நவீன தொழில்நுட்பம், விவசாயத்தில் அதிகளவில் பயன்படுத்தப்படுவது தெரியவந்துள்ளது என, விரிவாக்க ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

வேளாண் பல்கலை அறிமுகம் செய்யும், ஆராய்ச்சிகள் மற்றும் கண்டுப்பிடிப்புகள் தொழில்நுட்பங்கள், அனைவரையும் சென்றடைய, வேளாண் பல்கலை, விரிவாக்க மையம், 2008ம் ஆண்டில் இணையதளம் உருவாக்கியது. தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டத்தின் கீழ், உருவாக்கப்பட்ட இந்த இணையதளத்தில், விவசாயம் சம்பந்தப்பட்ட, அனைத்து தகவல்களும் துறைவாரியாக, தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனால் பார்வையிடும் விவசாயிகளின் எண்ணிக்கை, அதிகரித்து வருகிறது.

இணையதளத்தில், வேளாண், தோட்டக்கலை, கால்நடை, மீன்வளர்ப்பு, பட்டுப் புழு வளர்ப்பு, வனவியல், வேளாண் பொறியியல், விதை, அங்கக வேளாண்மை என துறை தகவல்கள், தனித்தனியே குறிப்பிடப்பட்டுள்ளன. விவசாயிகளுக்கான அரசு மானிய திட்டங்கள், தொழில்நுட்பங்கள், வானிலை, வங்கி கடன், விவசாயம் குறித்த தினசரி நாளிதழ் செய்திகள், இயற்கை வேளாண்மை, பயிர்மருத்துவம் என, துறைவாரியாக, 8.5 லட்சம் பக்கங்களடங்கிய தகவல்கள், பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

விளைநிலத்தில், சாகுபடி செய்யப்படும் பயிர்களுக்கு, அடிஉரம் போடுதல், பூச்சி கட்டுப்பாடு, இயற்கை முறையில் மகசூல் பெறுதல், சந்தைப்படுத்தல் உள்ளிட்ட அடிப்படை சந்தேகங்
களுக்கான பதில்கள், துறைவாரியாக குறிப்பிடப்பட்டுள்ளன.விவசாயிகள் மட்டுமல்லாது, தொழில்முனைவோர், வியாபாரிகள், வேளாண் மாணவர்கள், மதிப்பூட்டல் பொருட்கள் தயாரிப்பவர்கள் என, நான்கு ஆண்டுகளில், 32 லட்சம் பேர் பார்வையிட்டுள்ளனர். இதில், வெளிநாட்டினரும் உண்டு. ஒரு நாளைக்கு சராசரியாக, 1200 புதிய பார்வையாளர்கள் பார்வையிடுவதாகவும், 66 சதவீதம் பேர், தினமும் உபயோகிப்பதாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

குறைந்த விளைநில பரப்பில், அதிக செலவில்லாமல், தரமான முறையில் அதிகளவு மகசூல் பெறும் விவசாயிகளை, அங்கீகாரப்படுத்தும் வகையில், சிறப்பு பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது. இதனுடன், அவர்களின் ஒலி, ஒளி காட்சி விளக்கப்படமும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு வேளாண் பல்கலை, விரிவாக்க கல்வி இயக்க இயக்குனர் பிலிப் கூறுகையில், ''நவீன தொழில்நுட்பம், விளைநிலத்தில் பயன்படுத்தப்படும் போதே ஆராய்ச்சிகளும், கண்டுப்பிடிப்புகளும் முழுமையடையும். தொழில்நுட்பத்துக்கும், விவசாயிக்கும் ஒரு பாலமாக தான் இணையதளம் உருவாக்கப்பட்டது. இதனை பார்வையிடுவோர் அதிகரித்து வருவதால், விவசாயம் மறுமலர்ச்சி அடைந்து வருகிறது. இணையதளத்தை பார்வையிடும் வெளிநாட்டவர் பலர், இங்கு வந்து பயிற்சி பெற்று செல்கின்றனர்,'' என்றார்.

விவசாயிகள் www.agriportal.com எனும் இணையதள முகவரியில் சென்று பயன் பெறலாம்.

Source : Dinamalar

No comments:

Post a Comment