உணவு தானிய உற்பத்தியை நிகழாண்டில் 1.5 லட்சம் மெட்ரிக் டன்னாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் டிபி. ராஜேஷ் தெரிவித்துள்ளார்.
ஆட்சியர் அலுவலக அரங்கில் வேளாண் துறையின் மூலம் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விவசாயிகளுக்கான மண்வள அட்டை வழங்கும் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து அவர் பேசியது:
விவசாயிகளின் வருமானம் 3 மடங்காக அதிகரிக்கவும், அவர்கள் பொருளாதார முன்னேற்றத்தில் சிறந்து விளங்கவும் தமிழக முதல்வர் பல்வேறு வகையான நலத் திட்டங்களை விவசாயிகளுக்கு வழங்கி வருகிறார்.
விவசாயத்தின் அடிப்படை ஆதாரம் மண்வளம். வளமான மண்ணே அதிக விளைச்சலுக்கு ஒரு அங்கமாக திகழ்ந்து வருகிறது.
முன்பெல்லாம் விவசாயிகள் தங்கள் வயல்களில் மண்ணை சேகரித்து பரிசோதனை நிலையம் மற்றும் நடமாடும் மண் பரிசோதனை நிலையத்துக்கு அனுப்பி ஆய்வுசெய்து மண்ணிலுள்ள சத்துக்கேற்றவாறு பயிர்களை தேர்வுசெய்து விவசாய பணிகளை மேற்கொள்வர்.
இந்த நிலையை மாற்றி வேளாண் துறையின் மூலம் இணையதளம் தொடங்கப்பட்டு, அதில் மண்வளம் குறித்து பதிவு விவரங்கள் பெறப்பட்டு தேவையான கருத்துகளை விவசாயிகளுக்கு குறுஞ்செய்திகள் வழியாக வழங்க பணிகள் மேற்கொள்ளப்பட்டு, தற்போது இத்திட்டம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தில் அனைத்து விவசாயிகளும் பயன்பெறும் வகையில் மண்வள அட்டை வழங்க பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கரூர் மாவட்டத்தில் 1,46,056 பண்ணை குடும்பங்களுக்கு மண்வள அட்டை வழங்க திட்டமிட்டு, 2015-16-ம் ஆண்டு 8 வட்டாரங்களில் 8,284 மண் மாதிரிகள் சேகரித்து 59,226 பண்ணை குடும்பங்களுக்கு மண்வள அட்டை வழங்கவும், 2016-17-ம் ஆண்டு 12,972 மண் மாதிரிகள் சேகரித்து, 86,825 பண்ணை குடும்பங்களுக்கு மண்வள அட்டை வழங்கவும் திட்டமிட்டு, முதல் கட்டமாக 10,346 நபர்களுக்கு இன்று மண்வள அட்டை வழங்கப்படுகிறது.
நிர்ணயிக்கப்பட்ட இலக்கைவிட 124.89% சாதனை மேற்கொண்டு மாநில அளவில் கரூர் மாவட்டம் மண்வள அட்டை வழங்குவதில் சிறப்பிடத்தை பெற்றுள்ளது.
கரூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு ஒரு லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. நிகழாண்டுக்கு இத்திட்டத்தை பயன்படுத்துவதன் மூலம் 1.5 லட்சம் மெட்ரிக் டன்னாக அதிகரிக்கப்பட உள்ளது என்றார் ஆட்சியர்.
முன்னதாக, வேளாண் துறை மூலம் மண் பரிசோதனையால் உண்டாகும் பயன் குறித்து அமைக்கப்பட்ட கண்காட்சியை ஆட்சியர் பார்வையிட்டார். பிறகு, விவசாயிகளுக்கு மண்வள அட்டையை வழங்கியதுடன், 2 பயனாளிகளுக்கு தலா 97,500 ரூபாயில் ரோட்டவேட்டர் கருவிகளும், ஒருவருக்கு ரூ. 5,18,271 மதிப்பீட்டில் டிராக்டர், 2 பேருக்கு தலா ரூ. 1.81 லட்சத்தில் பவர்டில்லர் எந்திரங்கள் என 14 பயனாளிகளுக்கு ரூ. 10.75 லட்சத்தில் பல்வேறு உபகரணங்களை ஆட்சியர் வழங்கினார்.
நிகழ்ச்சியில், வேளாண்மைத் துறை இணை இயக்குநர் அல்தாப், துணை இயக்குநர்கள் மதனகோபால், சிவானந்தம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ஜெயந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Source : Dinamani
No comments:
Post a Comment