Friday, February 19, 2016

கோடை சீசனுக்காக 10 டன் பழங்களில் பழச்சாறு தயாரிக்கும் பணி ஜரூர்


குன்னுார் பழவியல் நிலையத்தில், வரும் கோடை சீசனுக்காக, 10 டன் பழங்களில், பழச்சாறு தயாரிக்கும் பணி நடந்து வருகிறது.
நீலகிரி மாவட்டம், குன்னுார் பகுதிகளில், பேரி, பீச், பிளம்ஸ் உள்ளிட்ட பழ வகைகள் அதிகளவில் விளைகின்றன. இதற்காக, குன்னுார் சிம்ஸ்பூங்கா அருகில் உள்ள தோட்டக்கலைதுறையின் பழவியல் நிலையத்தில், ஜாம், பழரசம், ஊறுகாய் போன்றவை தயாரிக்கப்பட்டு வருகிறது.
இதில், பெரி, ஸ்ட்ராபெர்ரி, பிளம்ஸ் மற்றும் பல வகையான பழங்களை கொண்டு ஜாம் வகைகள், திராட்சை, ஆரஞ்ச், ஜெல்லி, ஜாதிக்காய், லெக்கோட், பைன்ஆப்பிள் ஆகியவற்றை கொண்டு 'ஸ்குவாஸ்' எனப்படும் பழச்சாறு; ஜாதிக்காய், மால்மெட் ஆரஞ்ச் லெக்கோட் ஆகியவற்றின் ஜாம்கள், தயாரிக்கப்பட்டு வருகிறது. இவை, குன்னுார் சிம்ஸ்பூங்கா, கல்லாறு, பர்லியார், காட்டேரி, ரோஜா பூங்கா, ஊட்டி தாவரவியல் பூங்கா பகுதிகளில் விற்பனை செய்யப்படடு வருகிறது.
தற்போது, ஒன்றரை டன் கொண்ட பைன்ஆப்பிள் பழங்களால், பழரசம் தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. மேலும், ஒரு டன் திராட்சையை கொண்டும் பழரசம்
தயாரிக்கப்படுகிறது.
இதுகுறித்து, தோட்டக்கலை இணை இயக்குனர் மணி கூறுகையில்,“குன்னுார் பழவியல் நிலையத்தில், 10 டன் அளவிலான ஜாம், ஜெல்லி, ஊறுகாய் போன்றவை தயார் செய்யும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
“ஆண்டு தோறும் இதற்காக திட்டமிடப்பட்டு, அந்தந்த காலநிலைக்கு ஏற்ப விளையும் பழங்களை வாங்கியும், தோட்டக்கலை துறையின் கீழ் உள்ள பழப்பண்ணைகளில் விளையும் பழங்களையும் கொண்டு தயாரிக்கப்படுகிறது.அரை கிலோ ஜாம்,70 ரூபாய்; பழச்சாறு,65 ரூபாய்; ஊறுகாய் 60 ரூபாய் எனவும் விற்பனை செய்யப்படுகிறது,” என்றார்.

Source : dinamalar

No comments:

Post a Comment