Friday, September 18, 2015

"உடைந்த முட்டைகளை பயன்படுத்துவதைத் தடுக்க வேண்டும்'



உணவகங்கள், பேக்கரிகளில் உடைந்த முட்டைகளைப் பயன்படுத்துவதைத் தடுக்க வேண்டும் என முட்டை விற்பனையாளர்கள் மாவட்ட உணவுப் பாதுகாப்பு அலுவலரிடம் வெள்ளிக்கிழமை மனு அளித்தனர்.
இது தொடர்பாக சேலம் முட்டை விற்பனையாளர்கள் நலச் சங்கத் தலைவர் கே.ஜே.ராஜகோபாலன் தலைமையில் செயலர் சுந்தரராஜு உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்டோர் சேலம் மாவட்ட உணவுப் பாதுகாப்பு அலுவலரிடம் அளித்த மனுவின் விவரம்: நாமக்கல், ராசிபுரத்திலிருந்து சேலம் மாவட்டத்துக்கு நாள்தோறும் சுமார் 4 லட்சம் முட்டைகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. இதில் பேருந்து, ஆட்டோ, இரு சக்கர வாகனங்கள் முலம் நாள்தோறும் சுமார் 20 ஆயிரம் உடைந்த முட்டைகள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன. உடைந்த முட்டைகளை சாலையோரக் உணவகங்கள், பேக்கரி கடைக்காரர்கள் வாங்கி உபயோகப்படுத்துகின்றனர்.
உடைந்த முட்டையை ஒரு நாளுக்குள் பயன்படுத்தினால் உடலுக்கு தீங்கு இல்லை. ஆனால், ஒரு வாரத்துக்கு முன்பு உடைந்த முட்டைகளையே விற்பனை செய்கின்றனர். இந்த முட்டைகளின் வழியே நச்சுக் கிருமிகளும், தூசுகளும், பூச்சிகளும் உள்நுழைய வாய்ப்புகள் அதிகம். இந்த முட்டைகளை உபயோகப்படுத்தி தயாரிக்கப்படும் உணவுப் பொருள்களை மனிதர்கள் சாப்பிடும் போது, அவர்களுக்கு வாந்தி, மயக்கம், தலைச்சுற்றல் உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படும். இது தவிர டெங்கு, பன்றிக் காய்ச்சல்களும் ஏற்பட வாய்ப்புள்ளன. சில வியாபாரிகள் உடைந்த முட்டைகளை விற்பனை செய்வதால், நல்ல முட்டைகளை விற்பனை செய்யும் முட்டை விற்பனையாளர்களுக்கும், வியாபாரிகளுக்கும் அவப்பெயர் ஏற்படுகிறது. எனவே, இது குறித்து நடவடிக்கை எடுத்து உடைந்த முட்டைகளை விற்பனை செய்வதையும், பயன்படுத்துவதையும் தடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனுவைப் பெற்றுக் கொண்ட உணவுப் பாதுகாப்பு அலுவலர் டி.அனுராதா, இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

http://www.dinamani.com/edition_dharmapuri/salem/2015/09/19/%E0%AE%89%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D/article3035944.ece

No comments:

Post a Comment