Friday, September 25, 2015

அதிரவைக்குது 'ஆர்கானிக்' உணவுகள் விலை: உண்மையா... கண்டறிவது எப்படி



மதுரை: 'ஆர்கானிக் உணவு பொருட்கள்' என்ற பெயரில் ஒன்றுக்கு பத்தாக விலை வைத்து விற்கும் வியாபாரிகளால், நுகர்வோருக்கு தரமான, இயற்கையான விளைபொருட்களை கண்டறிய முடியாத நிலை உள்ளது.
வேளாண்மை துறையில் இணை வேளாண்மை இயக்குனர் கட்டுப்பாட்டின் கீழ், அங்கக வேளாண்மை சான்றிதழ் வழங்கும் அலுவலகங்கள் மாவட்டம் தோறும் உள்ளன. சான்றிதழ் பெறுவதற்கு நிறைய விதிமுறைகள் உள்ளன. இரண்டு ஆண்டுகள் பூச்சிமருந்து தெளிக்கக்கூடாது; அதுகுறித்த பயிற்சியும் அளிக்கப்படுகிறது. வயலை நேரில் பார்த்து அதன்பின் அதிகாரிகள் சான்றளிப்பர். இதுதான் உண்மையான 'ஆர்கானிக் உணவுப்பொருட்கள்'. ஆனால் அரசு சான்றிதழ் பெறாமல், கொய்யாவில் துவங்கி காய்கறி, கீரைகள், சிறு, குறு தானியங்களில் 'ஆர்கானிக்' என்ற பெயரில் வியாபாரிகள் கூடுதல் விலை வைத்து விற்கின்றனர். உடலுக்கு நல்லது என்ற எண்ணத்தில் கூடுதல் விலை கொடுத்து வாங்கும் நுகர்வோருக்கு, இயற்கையான பொருட்கள் கிடைப்பதில்லை.
மானாவாரி நிலத்தில் பெய்யும் மழையை நம்பி, கோடையில் உழுது மழை வரும் போது விதைப்பர். அடுத்த மழையில் பயிர் பிழைத்துக் கொள்ளும். மதுரை மற்றும் சுற்றியுள்ள
 
மாவட்டங்களில் இப்படி மானாவாரி விவசாயத்தில் நிலக்கடலை, எள், கொள்ளு, சாமை, வரகு, கம்பு, மக்காச்சோளம், சோளம், தினை, குதிரைவாலி, கால்நடை
 
தீவனப்பயிர்களை சாகுபடி செய்கின்றனர்.நாட்டுரகங்களில் இயற்கையாகவே பூச்சி, நோய் தாக்குதல் குறைவு, நுாற்புழுக்கள் தாக்குதல் குறைவு. தண்ணீர் இல்லாததால் இயல்பாகவே செடிகள் நோய் தாக்குதலை எதிர்த்து வளர்கின்றன. எனவே மானாவாரியில் பூச்சிக்கொல்லி, களைக்கொல்லி, ரசாயன உரங்கள் எதுவும் தேவையில்லை. இவற்றை தொடர்ந்து பயிர் செய்வதும் கிடையாது. ஆறுமாதம் நிலம் சும்மா கிடக்கும். அதன்பின் ஒரு முறை வரகு விதைத்தால் மறுமுறை சோளம், நிலக்கடலை பயிரை மாற்றுவதாலும் நோய் எதிர்ப்பு சக்தி
 
பெறுகின்றன.இத்தகைய சிறு, குறுந்தானியங்களை விவசாயிகளிடம் கிலோ ரூ.20க்கு வாங்கினால், அவற்றை ரூ.180 வரை விலை வைத்து வியாபாரிகள் விற்கின்றனர். இதனால் விவசாயிகளுக்கும் நஷ்டம், நுகர்வோருக்கும் நஷ்டம் ஏற்படுகிறது.
நுகர்வோர்கள் 'ஆர்கானிக்' உணவு விற்பனை நிலையங்களில், அதற்கான அரசு சான்றிதழை சரிபார்த்து வாங்கினால் ஏமாற்றத்தை தவிர்க்கலாம்.
தமிழகத்தில் அங்கக வேளாண்மைக்கு விவசாய பயிற்சிகள் தரப்படுகின்றன. புத்தகங்களும் வெளிவந்துள்ளன. விவசாயிகள் அதற்குரிய சான்றிதழை பெற்று விளைபொருட்களை விற்றால் கூடுதல் விலை கிடைக்கும்.


No comments:

Post a Comment