Friday, September 25, 2015

நகராட்சியில் கருவேல மரங்களை அகற்ற நோட்டீஸ்! நிலத்தடி நீரை பாதுகாக்க அதிகாரிகள் முடிவு



திருத்தணி : தற்போது நிலவிவரும், குடிநீர் தட்டுப்பாட்டை போக்கவும், நிலத்தடி நீரை பாதுகாக்கவும், முதற்கட்ட நடவடிக்கையாக, நகராட்சியிலுள்ள கருவேல மரங்களை அகற்ற, மரங்களின் உரிமையாளர்களுக்கும், துறை அலுவலர்களுக்கும், நோட்டீஸ் கொடுக்கப்பட்டு வருகிறது. மேலும், இதுகுறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தவும் நகராட்சி நிர்வாகம் முடிவு செய்து, அதற்கான பணியில் ஈடுபட்டு உள்ளது.
திருத்தணி நகராட்சியில் உள்ள, 21 வார்டுகளில், 11,940 குடும்பத்தினர் வசிக்கின்றனர். இங்குள்ள, 193 தெருக்களுக்கு, குழாய்கள் மூலம், நகராட்சி நிர்வாகம் குடிநீர் வழங்குகிறது. மேலும், 147 கை பம்பு, 20 ஆழ்துளை கிணறுகள் மூலம் மின் மோட்டார் அமைத்து, நேரடியாக குழாய்களில் தண்ணீர் வினியோகம் செய்யப்படுகிறது.
16 லட்சம் லிட்டர் : நகராட்சிக்கு, ஒரு நாளைக்கு, 42 லட்சம் லிட்டர் குடிநீர் தேவைப்படுகிறது. ஆனால், தற்போது, அரக்கோணம் கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம், 7 லட்சம் லிட்டர் தண்ணீரும், அருங்குளம் கொற்றலை ஆற்றில் இருந்து, 6 லட்சம் லிட்டர் தண்ணீரும் பெறப்பட்டு, வினியோகம் செய்யப்படுகிறது.மேலும், 'நகராட்சி தெருக்கள் மற்றும் ஏரியில் அமைத்துள்ள, 100 ஆழ்துளை கிணறுகள் மூலம், 11 லட்சம் லிட்டரும், விவசாய கிணறுகளில் இருந்து, வாடகை டிராக்டர்கள் மூலம், 2 லட்சம் லிட்டர் என, மொத்தம், 26 லட்சம் லிட்டர் தண்ணீர் பெறப்பட்டு, வினியோகம் செய்யப்படுகிறது.மீதமுள்ள, 16 லட்சம் லிட்டர் தண்ணீர் பற்றாக்குறையால், நகரவாசிகளுக்கு, நான்கு அல்லது ஐந்து நாட்களுக்கு ஒரு முறை, குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.
1,102 கருவேல மரங்கள் : கருவேல மரங்களால், நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைவதுடன், அப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடும் ஏற்படுகிறது. எனவே, நகராட்சியில் நிலவும் குடிநீர் பிரச்னையை போக்கவும், நிலத்தடி நீரை பாதுகாக்கவும், நகராட்சி நிர்வாகம், 21 வார்டுகளில் உள்ள கருவேல மரங்களை அகற்ற முடிவு செய்தது.இதையடுத்து, நகராட்சி ஊழியர்கள், கடந்த ஒரு மாதமாக, கருவேல மரங்களை கணக்கெடுக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இதில், 1,102 மரங்கள் இருப்பது தெரிய வந்துள்ளது.

http://www.dinamalar.com/district_detail.asp?id=1349400

No comments:

Post a Comment