Tuesday, September 29, 2015

நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தில் விரைவில் திருத்தம்: இணையதளத்தில் பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம்



நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தில் விரைவில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளதால் இணையதளம் மூலமாக பொதுமக்கள் தங்களது கருத்துகளைத் தெரிவிக்கலாம் என தமிழக அரசின் உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆணையர் சூ.கோபாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
 ஈரோட்டில் திங்கள்கிழமை நடைபெற்ற ஈரோடு மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு மையத்தின் "நுகர்வோர் காவலன்' இதழின் வெள்ளி விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற அவர் பேசியதாவது:
 மத்திய அரசு நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தில் திருத்தம் செய்யவும், சில மாற்றங்களை ஏற்படுத்தவும் முடிவு செய்துள்ளது. நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய திருத்தம் குறித்து பொதுமக்களின் கருத்துகளைச் சேகரிக்கும் முயற்சியாக தற்போது இணையதளம் மூலமாக மக்களின் கருத்துகளைத் தெரிவிக்குமாறு அரசு அறிவித்துள்ளது.
 எனவே தன்னார்வ நிறுவனங்களும், நுகர்வோர் பாதுகாப்பு அமைப்புகளும் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ள விரும்பினால் தங்களது கருத்துகளை இணையதளம் மூலமாக மத்திய அரசுக்கு தெரிவிக்கலாம். பெருகி வரும் கட்செவி அஞ்சல் போன்ற புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தியும் நுகர்வோர் விழிப்புணர்வை அமைப்புகள் மேற்கொள்ள முன்வரலாம்.
 அண்மைக்காலமாக இணைய வர்த்தகம் மூலமாகப் பொருள்கள் விற்பனை அதிகரித்து வருகிறது.
 எனவே, இணைய வர்த்தகத்தில் பொருள்களை வாங்கும்போது நுகர்வோர்கள் ஜாக்கிரதையாகவும், விழிப்புணர்வுடனும் இருக்கவேணடும். வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களை பயன்படுத்தி ஏமாற்றுபவர்களிடமும் நுகர்வோர் விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும் என்றார்.
 விழாவில் முன்னதாக ஈரோடு மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு மையத் தலைவர் எஸ்கேஎம்.மயிலானந்தன் வரவேற்றார். நுகர்வோர் பாதுகாப்பு ஆணையர் கோபாலகிருஷ்ணன், நுகர்வோர் பாதுகாப்பு தொடர்பான 10 புதிய நூல்களை வெளியிட, அதை ஈரோடு மாவட்ட ஆட்சியர் எஸ்.பிரபாகர் பெற்றுக்கொண்டார்.
 மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் ஸ்டெல்லா ராணி, மாவட்ட வருவாய் அலுவலர் சதீஷ், கோட்டாட்சியர் நர்மதாதேவி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நுகர்வோர் பாதுகாப்பு மைய மாவட்டச் செயலாளர் ஆர்.பாலசுப்ரமணியன் நன்றி கூறினார்.
 நுகர்வோர் பாதுகாப்பு மைய நிர்வாகிகள் டாக்டர்கள் ராஜா, அய்யப்பன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

http://www.dinamani.com/edition_coimbatore/erode/2015/09/29/%E0%AE%A8%E0%AF%81%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D/article3053283.ece

No comments:

Post a Comment