Tuesday, September 29, 2015

சென்னையின் நீர் ஆதாரங்களை பாதுகாக்க தனி இயக்கம்




சென்னை: ''சென்னையின் நீர் ஆதாரங்களை பாதுகாத்து, சீரமைக்க, நீடித்த குடிநீர் ஆதார பாதுகாப்பு இயக்கம் துவங்கப்படும்,'' என, முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.
சட்டசபையில், 110வது விதியின் கீழ், நேற்று அவர் வெளியிட்டுள்ள அறிவிப்புகள்:
*
சென்னை நகரின், நீர் ஆதாரங்களை பாதுகாத்து சீரமைக்க, 'நீடித்த குடிநீர் ஆதார பாதுகாப்பு இயக்கம்' துவங்கப்படும் 
*
இந்த இயக்கம் மூலம், பெரிய குடியிருப்பு வளாகங்கள், அரசு கட்டடங்கள், கல்லுாரிகள், பள்ளிகளில், மழைநீர் சேமிப்பு கட்டமைப்புகள் உருவாக்கப்படும். 15 பெரிய வளாகங்கள் தேர்வு செய்யப்பட்டு, அவற்றில் மாதிரி திட்டங்கள் (பைலட் ப்ராஜக்ட்ஸ்) மேற்கொள்ளப்படும்
*
மழைநீர் வடிகால்களில் பெறப்படும் நீரை, நீரூற்று கிணறுகள் மூலம் சேகரித்து, நிலத்தடி நீர் மேம்படுத்தப்படும்; இதற்காக, இரண்டு இடங்களில் மாதிரி திட்டங்கள் அமைக்கப்படும்
*
சென்னை நகர பகுதியில் உள்ள, 15 ஏரிகள் தேர்வு செய்யப்பட்டு, பாதுகாப்பு மற்றும் சீரமைப்புப் பணிகள் செய்யப்படும் 
*
சுத்திகரித்த கழிவுநீர், நீர்நிலைகளின் நீர் ஆதாரத்தை மேம்படுத்த பயன்படுத்தப்படும்; இவற்றுக்கான மாதிரிப் பணிகள், ஐந்து கோடிரூபாயில் மேற்கொள்ளப்படும்
*
சென்னை தெற்கில் உள்ள விரிவாக்க பகுதிகளுக்காக, சோழிங்கநல்லுாரில், தினமும், ஐந்து கோடி லிட்டர் கழிவுநீரை, சுத்திகரிப்பு செய்யும் நிலையம், 65 கோடி ரூபாயில் அமைக்கப்படும் 
*
தண்டையார்பேட்டை மண்டலத்தில், 23 கோடி ரூபாய் செலவில்,சாலை, புதிய தெருக்களில் பெயர் பலகை, பூங்கா சீரமைப்பு, பள்ளி கட்டடங்கள் அபிவிருத்தி, பொதுக் கழிப்பறை, உடற்பயிற்சிக் கூடங்களை நவீனப்படுத்துதல் உள்ளிட்ட, பணிகள் மேற்கொள்ளப்படும் 
l
மொத்தம், 510 பேருந்து பயணிகள் நிழற்குடைகள், 51 கோடி ரூபாயில் நவீனப்படுத்தப்படும். இவ்வாறு அவர் அறிவித்தார்.


தேனியில் குடிநீர் திட்டம் 

தேனி மாவட்டத்தில், கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை மற்றும் ஆண்டிப்பட்டி ஒன்றியத்தைச் சேர்ந்த, 16 கிராம குடியிருப்புகளுக்கு, ஐந்து கோடி ரூபாய் செலவில், கூட்டு குடிநீர்த் திட்டம் செயல்படுத்தப்படும்.

No comments:

Post a Comment