Monday, September 28, 2015

ஒட்டன்சத்திரத்தில் விதைப்பு பணி தீவிரம் விவசாய தொழிலாளர் பற்றாக்குறை :




ஒட்டன்சத்திரம்:ஒட்டன்சத்திரத்தில் மக்காச்சோளம் விதைப்பு பணிகள் மும்முரமாக நடப்பதால், விவசாய தொழிலாளர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இவர்களின் கூலி உயர்ந்துள்ளது.

ஒட்டன்சத்திரத்தை சுற்றியுள்ள கிராமப்பகுதிகளில் ஆடி மாதம் மழை பெய்யாமல் போனதால், மானாவாரி நிலங்களில் விதைப்பு பணிகள் துவங்கப்படாமல் இருந்தது. மஞ்சநாயக்கன்பட்டி, போடுவார்பட்டி, பொருளூர் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்யும் என்ற நம்பிக்கையில் வறண்ட நிலத்தில் மக்காச் சோளம் விதைக்கப்பட்டிருந்தது. விதைக்கப்பட்ட பல நாட்களான பின்பும் மழை பெய்யாததால் மண்ணுக்குள்ளேயே விதைகள் மக்கி விட்டன. சில இடங்களில் விதை முளைத்து பயிர் மேலே வந்த பின்பும், தண்ணீர் இல்லாததால் கருகின. விவசாயிகள் கடந்த மாதம் பெய்த மழையை பயன்படுத்தி ஒரு சில கிராமங்களில் உழவுப் பணி மட்டும் செய்து முடித்தனர்.

சில நாட்களுக்கு முன்பு இப்பகுதியில் பலத்த மழை பெய்தது. இதனால் மானாவாரி நிலங்களில் விவசாயிகள் மக்காச்சோளம்,பருத்தியை பயிரிட ஆர்வம் காட்டி வருகின்றனர். தொடர்ந்து மழை இல்லாததால், ஈரம் உலர்வதற்குள் விதைத்து விட வேண்டும் என்று அனைவரும் ஒரே சமயத்தில் விதைப்பு பணிகளை துவங்கியனர். இதனால் விவசாய தொழிலாளர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. சிலர் கூலியை உயர்த்தி கொடுக்க துவங்கினர். ரூ.150 முதல் ரூ.200 ஆக இருந்த தொழிலாளர் கூலி, தற்போது ரூ.250 க்கு உயர்ந்து விட்டது. கூலியை அதிகரித்துத் தர தயாராக இருந்த போதிலும், தொழிலாளர்கள் கிடைக்கவில்லை என்று விவசாயிகள் தெரிவித்தனர்.

Source : Dhinamalar

No comments:

Post a Comment