சென்னை,
இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழ்நாட்டில்
நடமாடும் கால்நடை மருத்துவ ஊர்திகள் அறிமுகப்படுத்தப்படும் என்று சட்டசபையில் முதல்–அமைச்சர்
ஜெயலலிதா அறிவித்தார்.
சட்டசபையில் முதல்–அமைச்சர் ஜெயலலிதா
110–வது விதியின் கீழ் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–
மீன் இறங்கு தளங்கள்
* படகுகள் பாதுகாப்பாக நிறுத்தப்படுவதற்கான
மீன்பிடி துறைமுகங்கள் மற்றும் மீன் இறங்கு தளங்கள் அமைக்கவும், பிடித்து வரப்பட்ட
கடல் உணவுகளை பதப்படுத்தும் வசதிகளை உருவாக்கவும் நடப்பு நிதியாண்டில், தமிழகத்தில்
கடலூர் மாவட்டத்தில் பேட்டோடை, தூத்துக்குடி மாவட்டத்தில் சிங்கித்துறை மற்றும் பழைய
காயல், நாகப்பட்டினம் மாவட்டத்தில் சாமந்தான்பேட்டை மற்றும் திருமுல்லை வாசல் ஆகிய
5 இடங்களில் மீன் இறங்கு தளங்கள் 25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும்.
இதனால் 465 மீன்பிடி படகுகள்
பாதுகாப்பாக நிறுத்துவதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டு சுமார் 8,400 மீனவர்கள் பயனடைவர்.
இவ்வாறு ஜெயலலிதா கூறினார்.
நடமாடும் கால்நடை மருத்துவ
ஊர்திகள்
110–வது விதியின் கீழ் மேலும்
ஒரு அறிவிப்பை வெளியிட்டு அவர் பேசியதாவது:–
* தமிழக கால்நடைகளின் வளத்தையும்,
நலத்தையும் மேம்படுத்த, கால்நடைகளுக்கு தேவையான தடுப்பூசி மற்றும் நோய் கண்டறிய பயன்படும்
ஆய்வகப் பெட்டிகளின் தரமறிய; கால்நடை உயிரியல் பாதுகாப்பு சோதனைச் சாலை மற்றும் சிறப்பு
ஆராய்ச்சி மையம் என்ற உலகத் தரமிக்க சிறப்பு ஆராய்ச்சி மையம், 12 கோடியே 75 லட்சம்
ரூபாய் செலவில் அமைக்கப்படும்.
சென்னை மாதவரத்தில் உள்ள தமிழ்நாடு
கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக வளாகத்தில், இது அமைக்கப்படும். மேலும், இதுவரை
பறவைக்காய்ச்சல் மற்றும் கோமாரி நோயினை கண்டறிவதற்கு வட மாநிலங்களில் உள்ள ஆய்வுச்சாலைகளையே
பயன்படுத்த வேண்டிய நிலை இருந்தது. தற்போது இந்த மையம் நிறுவப்படுவதால், மேற்கண்ட நோய்களை
இவ்வாய்வகத்திலேயே கண்டறிய வசதி ஏற்படும். இதன் மூலம், விவசாயிகள் மற்றும் கோழி வளர்ப்போர்
மிகுந்த பயன்பெறுவர்.
* அவசர, அவசிய மருத்துவ வசதிக்காக
கால்நடைகளை அழைத்து வர இயலாத அளவுக்கு தொலைதூர கிராம பகுதிகளில் வசித்து வரும் விவசாயிகளின்
கால்நடைகளுக்கு அவசர சிகிச்சை அளிக்கும் பொருட்டு, இந்தியாவிலேயே முதன்முறையாக 10
‘‘நடமாடும் கால்நடை மருத்துவ ஊர்திகள்’’ தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தால்
6 கோடியே 34 லட்சம் ரூபாய் செலவில் வாங்கப்படும். இவ்வாறு ஜெயலலிதா கூறினார்.
No comments:
Post a Comment