Thursday, September 3, 2015

மண்வளம் மேம்பாடு தொடர்பான கருத்தரங்கம் கலெக்டர் மதிவாணன் தொடங்கி வைத்தார்



திருவாரூரில் மண்வளம் மேம்பாடு தொடர்பான கருத்தரங்கம் நடைபெற்றது. இதை மாவட்ட கலெக்டர் மதிவாணன் தொடங்கி வைத்தார்.

கருத்தரங்கம்

கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம், தமிழ்நாடு அரசு மாநில திட்டக்குழு நில பயன்பாடு-ஆராய்ச்சி வாரியம் மற்றும் உழவர் பயிற்சி மையம் சார்பில் திருவாரூரில் மண்வளம் மேம்பாடு, பசுந்தீவனம் உற்பத்தி, கால்நடை உற்பத்தி திறனை அதிகரித்தல் தொடர்பான கருத்தரங்கம் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் மதிவாணன் கருத்தரங்கை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியாவது:-
 

கால்நடைகளின் இன விருத்தி மற்றும் பால் உற்பத்தி திறன் அவை உட்கொள்ளும் தீவனங்களை பொருத்தே அமைகிறது. அடர் தீவனம், பசுந்தீவனம், உலர் தீவனம் மற்றும் இதர தீவனங்களில் உள்ள சத்துகளின் அளவை பொருத்தே உற்பத்தி திறன் இருக்கும். பசுந்தீவனம் மற்றும் உலர் தீவனத்தில் உள்ள சத்துகளானது அவை வளரும் மண் மற்றும் நீரில் உள்ள சத்துகளை பொருத்து அமைகிறது. மண், பசுந்தீவனம் மற்றும் கால்நடைகளுக்கு இடையே உள்ள சத்து சுழற்சி மூலம் உற்பத்தி திறனை அதிகப்படுத்தலாம். இதை பற்றி விவசாயிகளுக்கும், கால்நடை வளர்ப்போருக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்த கருத்தரங்கின் நோக்கம்.
 

அதிக லாபம் ஈட்டலாம்

மண் வளமும், மனித வளமும் ஒரு நாட்டுக்கு முக்கியமானவை. இந்திய பொருளாதார வளர்ச்சிக்கு வேளாண்மையும் அதனுடன் இணைந்த கால்நடை வளர்ப்பும் முக்கிய பங்கு வகிக்கிறது. மண் வளம் மேம்பாடு அடைய அதை பற்றிய ஆய்வு முக்கியம். திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மண் ஆய்வு கூடங்கள், வட்டார வேளாண்மை ஆலோசனை மையங்கள் உள்ளிட்டவை எப்போது, எந்த பயிர் உகந்தது என்பது பற்றி விவசாயிகளுக்கு அறிவுறுத்த வேண்டும். மண்ணின் தன்மைக்கு ஏற்றவாறு பசுந்தீவன பயிர்களை பயிரிட்டால், கால்நடை வளர்ப்பில் அதிக லாபம் ஈட்டலாம். இவ்வாறு கலெக்டர் மதிவாணன் கூறினார்.

கையேடு

முன்னதாக கலெக்டர் மதிவாணன் விவசாயிகளுக்கு மண்வளம் மேம்பாடு மற்றும் கால்நடை உற்பத்தி திறன் தொடர்பான கையேடுகளை வழங்கினார். நிகழ்ச்சியில் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக இயக்குனர் பாபு, கால்நடை பெருக்கம் மற்றும் தீவன அபிவிருத்தி பிரிவு துணை இயக்குனர் முகமதுஉதுமான், உதவி கலெக்டர் முத்துமீனாட்சி, மாவட்ட வளர்ச்சி மேலாளர் ரவிசங்கர், நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளர் பாஸ்கரன், உழவர் பயிற்சி மைய தலைவர் கதிர்செல்வன், செய்தி மக்கள் தொடர்பு அதிகாரி குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
 


http://www.dailythanthi.com/News/Districts/Thiruvarur/2015/09/04013529/Soil-fertility-improvement-Related-Seminar-Collector.vpf

No comments:

Post a Comment