Tuesday, September 22, 2015

தக்காளி சாகுபடியில் நஷ்டம் தவிர்க்க குழித்தட்டு தொழில்நுட்பம் அறிமுகம்




திண்டுக்கல் : ""இளைஞர்கள் குழிதட்டு தொழில்நுட்பத்தில் காய்கறி செடிகள் வளர்த்து, விற்பனை செய்யும் நர்சரி துவங்கலாம்'', என தோட்டக்கலைத்துறை பரிந்துரைத்துள்ளது.
திண்டுக்கல் ரெட்டியார்சத்திரம் காய்கறி மகத்துவ மையத்தில் குழிதட்டு (ப்ரோ ட்ரே) தொழில்நுட்பத்தில் காய்கறி நாற்றுக்கள் உற்பத்தியாகிறது. இம்முறையில் தென்னை நார் கழிவுகள் 1.25 கிலோ, நுண்ணுயிர் ஊக்கிகள் 200 கிராம் சேர்க்க வேண்டும். அதை குழிகளை கொண்ட பிளாஸ்டிக் தட்டில், ஒவ்வொரு குழியிலும் 98 தக்காளி விதைகளை விதைக்க வேண்டும்.
நட்ட 25 முதல் 30 நாட்களில் தக்காளி செடி நன்கு வேர் விட்டு வளரும். இந்த தொழில்நுட்பத்தால் சாதாரண நாற்றாங்கால் முறை வளர்ப்பில் ஏற்படும் விதை சேதாரம் இருக்காது. இதனால் வேர்களில் நுண்ணூட்டச் சத்துக்கள் அதிகரிக்கும். விவசாயிகள் விளைநிலத்தில் நாற்றுக்களை நடும்போது பாதிப்பு ஏற்படுவதில்லை. எனவே, தக்காளி மற்றும் காய்கறி சாகுபடியில் "ப்ரோ ட்ரே' தொழில்நுட்ப நாற்றுக்களை விவசாயிகளுக்கு வழங்க தோட்டக்கலைத்துறை முடிவு செய்தது.தொழில் துவங்கலாம்: வேலையில்லா இளைஞர்கள் இந்த தொழில் நுட்பத்தில் காய்கறி பயிர்களுக்கான நாற்றங்கால் அமைக்கலாம். வளமான, காய்கறி செடிகளை விவசாயிகளுக்கு விற்று வருமானம் ஈட்டலாம். ஏக்கருக்கு ரூ.4 ஆயிரம் நடவுச் செலவு, ரூ. 6 ஆயிரம் தொழில்நுட்பச் செலவு ஆகும். எனவும் தோட்டக்கலைத்துறை பரிந்துரைத்துள்ளது.
திண்டுக்கல் தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் கணேசன் கூறியதாவது: வேலையில்லா இளைஞர்களுக்கு இது சரியான வாய்ப்பு. தனியாக "ப்ரோ ட்ரே' தொழில்நுட்பத்தில் காய்கறி செடிகளை வளர்த்து விற்பனை செய்யலாம். 25 சென்டில் ஓராண்டில் 20லட்சம் நாற்று உற்பத்தி செய்யலாம். ஒரு நாற்றை 80 காசு முதல் 1.50 வரை விற்கலாம். இதன் மூலம் ரூ.5 முதல் 6 லட்சம் வருவாய் பெறலாம். இதில் 30 சதவீதம் உற்பத்தி செலவு இருக்கும். தற்போது தக்காளி, மிளகாய், கத்தரி மற்றும் முட்டைக்கோஸ் உற்பத்திக்கு உதவுகிறோம். நர்சரி துவங்க விரும்பும் இளைஞர்கள், திண்டுக்கல் துணை இயக்குனர் அலுவலகத்தில் விபரங்களை பெறலாம், என்றார்.


No comments:

Post a Comment