ஆலங்குடி, : நச்சற்ற உணவு உற்பத்தியை பெருக்குவது எப்படி என்பது குறித்து பெரம்பலூர் ரோவர் வேளாண் கல்லூரி மற்றும் ஆதிபராசக்தி வேளாண் கல்லூரிகளில் பயிலும் இறுதியாண்டு மாணவ, மாணவிகளுக்கான சிறப்பு பயிற்சி முகாம் புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் அடுத்த ஒடுகம்பட்டியில் உள்ள கொளுஞ்சி இயற்கை வேளாண் பண்ணையில் 10 நாட்கள் நடைபெற்றது. 2 கட்டங்களாக நடத்தப்பட்ட இப்பயிற்சி முகாமை பண்ணை இயக்குநர் ஆஸ்வோல்டு குவின்டால் துவக்கிவைத்துப் பேசியதாவது: பெருகி வரும் மக்கள் தொகைக்கேற்ப வேளாண் உற்பத்தியைப் பெருக்க வேண்டிய தேவை விவசாயிகளுக்கும், அவர்களை வழிநடத்த வேண்டிய தேவை வேளாண் அலுவலர்களுக்கும் அனைத்தையும் செய்துதர மத்திய, மாநில அரசுகளுக்கும் அவசியம் ஏற்பட்டுள்ளது. இதேபோல் நவீன வேளாண்மையில் கலந்திருந்த ரசாயன நச்சுக்களைக் குறைத்து மனித இனத்தைக் காக்க வேண்டிய அவசியமும் தற்போது ஏற்பட்டுள்ளது.
எனவே, நச்சற்ற உணவு உற்பத்தியைப் பெருக்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. மற்றவர்களை வாழவைக்கும் விவசாயிகள் தங்களைத் தாங்களே நச்சு உணவில் இருந்து காத்துக்கொள்ள வேண்டி உள்ளது. இதற்காக உணவு உற்பத்தி செய்யும் விவசாயிகளைச் சந்தித்து அவர்களுக்கு கற்றுக்கொடுக்க இதுபோன்ற களப்பயிற்சி வழங்கப்படுகிறது என்றார். முகாமில் குடும்பம் என்ற தொண்டு நிறுவனம் துவங்கியது முதல் அதன் அவசியப் பணிகள் பற்றி செல்லத்துரை, இயற்கை விவசாயம் பற்றி ரெங்கராஜூ, சிறுதானிய விதை உற்பத்தி குறித்து உஷா நந்தினி, இடுபொருள் செயல்விளக்கம், மூலிகைக்கரைசல் ஆகியவை பற்றி பாஸ்கர் ஆகியோர் விளக்கிக் கூறினர்.
மேலும், ஒடுகம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் பசுமைப் படை மாணவர்களுக்கு வட்டப்பாத்தி காய்கறித் தோட்டம் அமைப்பது, நீர் ஆவியாவதைத் தடுக்கும் விதமாக மூடாக்கு முறையில் தோட்டங்கள் வளர்ப்பது குறித்து செயல் விளக்கம் அளிக்கப்பட்டது. இதற்கான ஏற்பாட்டை பள்ளித் தலைமையாசிரியர் ஆறுமுகம் செய்திருந்தார்.
வாலியம்பட்டி, குன்றாண்டார்கோயில். வீரப்பூர், ஒடுகம்பட்டி மற்றும் சுற்று வட்டாரக் கிராமங்களில் இதுபோன்ற களப் பயிற்சி நடத்தப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை மணிவாசகம் செய்திருந்தார். முகாம் நிறைவு நாளில் நஞ்சற்ற உணவு முறைகளின் அவசியம் குறித்து மாணவ, மாணவிகள் நடத்திய பல்சுவை நாடகம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தன.
முன்னதாக, துணை இயக்குநர் பங்கயவல்லி வரவேற்றார். முடிவில் சஞ்சீவி நன்றி கூறினார்.
http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=486430&cat=504
No comments:
Post a Comment