Wednesday, September 2, 2015

மருத்துவகுணம் அதிகம் நிறைந்த நோனி பழங்கள்_: ராமநாதபுரம் விவசாயி சாகுபடி செய்து சாதனை_



மருத்துவக் குணம் நிறைந்த நோனி பழங்களை, ராமநாதபுரம் மாவட்டத்தில் சாகுபடி செய்து சாதித்துள்ளார் பஞ்சம்தாங்கி கிராம விவசாயி ஒருவர்.
தமிழகத்தின் பூர்வீக மரமான மஞ்சனத்தி வகையைச் சார்ந்தது வெண் நுணா என்னும் நோனி மரம். ஆஸ்திரேலியா, மொரீஷியஸ், ஜாவா, பிலிப்பைன்ஸ், ஹவாய் போன்ற நாடுகளில் அதிகம் உற்பத்தி செய்யப்படும் நோனி பழங்களின் பழச்சாறுக்கு அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட மேலைநாடுகளில் கிராக்கி அதிகம்.
தமிழகத்தின் வறண்ட பாலை யாகக் கருதப்படும் ராமநாதபுரம் மாவட்டத்தில், திருப்புல்லாணி அருகே பஞ்சம்தாங்கி எனும் கிராமத்தில், மருத்துவக் குணம் நிறைந்த நோனி பழங்களை, கடந்த 6 ஆண்டுகளாக உற்பத்தி செய்து வருகிறார் விவசாயி சந்தவழியான்.
அவர் ‘நோனி’ பற்றி ‘தி இந்து’ செய்தியாளரிடம் கூறியது:
ராமநாதபுரத்தை ஆண்ட சேதுபதி மன்னர்களுக்கு, எங்கள் குடும்பத்தினர் பரம்பரை வைத்தியர்களாக இருந்துள்ளனர். அதனால் மருத்துவக் குணங்களைக் கொண்ட மரங்கள், தாவரங்களைப் பற்றிய அறிவு பாரம்பரியமாக இருந்துவந்தாலும் நான் சித்த மருத்துவர் ஆகாமல் சென்னை நியூ காலேஜில் இன்டர்மீடியட் படித்து சவூதி அரேபியா உள்ளிட்ட பல ஊர்களுக்குச் சென்று பணிபுரிந்தேன்.
இந்தியாவில் மறு அறிமுகம்
சில ஆண்டுகளுக்கு முன்னர், இந்தியாவில் நோனியை மறு அறிமுகம் செய்தபோது மஞ்சனத்தி மர வகையைச் சார்ந்த வெண்நுணாவான நோனியின் மீது ஈர்ப்பு உண்டானது. அதன்பின்னர், ஆஸ்திரேலியாவில் வசிக்கும் நண்பர் மூலம் நோனி பழக்கன்றுகளை 2008-ல் இறக்குமதி செய்து, தற்போது திருப்புல்லாணி அருகே பஞ்சம்தாங்கி கிராமத்தில் ஐந்தரை ஏக்கரில் தென்னை மரங்களுக்கு இடையே ஊடுபயிராக வளர்த்து வருகிறேன்.
நோனி ஜூஸ்
நடவு செய்த ஒரே ஆண்டில் நோனி காய்ப்புக்கு வந்து விடும். நான்கு ஆண்டு வயது கொண்ட ஒரு மரத்தில் 40 கிலோ முதல் 80 கிலோ வரையிலும் ஆண்டுக்கு பதினொரு மாதங்கள் விளைச்சல் எடுக்கலாம். இதில் சுமார் 10 லிட்டர் வரையிலும் நோனி ஜூஸ் எடுக்கலாம். ஒரு மரம் அதிகபட்சம் 40 ஆண்டுகள் வரையிலும் பலன் தரும்..
மரங்களில் இருந்து பறித்த நோனி பழங்களை ஐந்து மணி நேரத்துக்குள் பெரிய டிரம்களில் போட்டு, அதிகபட்சம் 22 நாட்கள் வரையிலும் இருட்டறையில் வைக்க வேண்டும். பின்னர், கலவை இயந்திரத்தில் போட்டு அரைத்து மூன்றுமுறை வடிகட்டினால் களி மாதிரி வரும். இதனை இரண்டு வாரங்கள் கழித்து ஜூஸ் ஆகப் பயன்படுத்தலாம்
தற்போது மருந்துக்கடைகளில் நோனி ஜூஸ் ஒரு லிட்டர் ரூ. 1,500 வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது. இவை பெரும்பாலும் இறக்குமதி செய்யப்பட்ட நோனி பவுடரில் இருந்துதான் தயாரிக்கப்படுகிறது.
அலோபதி மருத்துவத்தின் மீதுள்ள மோகத்தால் நாம் பாரம்பரிய மருத்துவ அறிவை இழந்து தவிக்கிறோம். நோனியின் பழம், வேர், இலைகள் என அனைத்தும் எதிர்மருந்தாக உள்ளது. கர்ப்பிணிகளுக்கு தாய்ப்பால் சுரக்க நோனிப் பழச்சாறு சிறந்த மருந்தாகப் பயன்படக் கூடியது.
மிகச் சிறந்த பணப்பயிர்
ஆஸ்திரேலியா, மொரீஷியஸ் போன்ற நாடுகளின் கடற்கரை ஓரங்களில் நோனி மரங்களை பயிரிடுகின்றனர். கடற்கரை மாவட்டமான ராமநாதபுரத்துக்கு மிகச் சிறந்த பணப்பயிராக நோனிப்பழ சாகுபடி இருக்கும். மேலும் ஒவ்வொருவரும், தமது வீட்டுத் தோட்டத்திலும் நோனி மரங்களை வளர்த்தால், நம் பாரம்பரிய மருத்துவத்தை மீட்கவும் வாய்ப்பு ஏற்படும் என்றார்._________



 

No comments:

Post a Comment