காட்பாடி சேவூரில் உள்ள இந்திய உணவுக் கழகக் கிடங்கில்
சேமித்து வைக்கப்பட்டுள்ள உணவுப் பொருள்களை நாசம் செய்யும் பூச்சிகளைக் கட்டுப்படுத்த
நவீன விளக்குப் பொறிகள் அமைக்கப்பட்டன.
இந்த புற ஊதா கதிர் விளக்குப் பொறிகள் அரக்கோணத்தில்
உள்ள இந்திய உணவுக் கழக கிடங்கிலும் நிறுவப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
வெளியிடங்களில் இருந்து ரயில்கள் மூலம் கொண்டு வரப்படும்
நெல், அரிசி, கோதுமை, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருள்கள் சேவூரில் உள்ள
இந்திய உணவுக் கழகக் கிடங்கில் சேமித்து வைக்கப்படுகின்றன. இங்கிருந்து தேவைக்கேற்ப
அனைத்துப் பகுதிகளுக்கும் பிரித்து அனுப்பப்பட்டு வருகின்றன.
இதுபொன்ற உணவுப் பொருள் கிடங்குகளில் தானிய மூட்டைகளை
நாசம் செய்யும் டைபோலீயா என்ற பூச்சிகள், வண்டுகள் அதிகம் இருப்பதுண்டு. இவை அருகில்
உள்ள குடியிருப்புகளுக்குப் பரவி உணவுப் பொருள்கள், குடிநீர் பாத்திரங்கள் உள்ளிட்டவற்றில்
விழுந்து பாதிப்பை ஏற்படுத்துவதுண்டு.
இவற்றை கட்டுப்படுத்த அடிக்கடி கிடங்குகளில் பூச்சி
மருந்துகளை தெளிப்பதுண்டு. இதில் ஒருசில இடர்பாடுகளை சேவூர் இந்திய உணவுக் கழகம் போன்றவை
தொடர்ந்து சந்தித்து வந்தன.
இந்த நிலையில், இத்தகைய பூச்சிகளையும், வண்டுகளையும்
புற ஊத கதிர்களை உமிழும் விளக்கு பொறிகள் மூலம் கட்டுப்படுத்தும் நவீன யுக்தியை கோவை
வேளாண் பல்கலைக் கழகம் கண்டுபிடித்தது. ரூ.5 ஆயிரத்தில் கிடைக்கும் இந்த நவீன விளக்கு
பொறிகளை உணவுப் பொருள் கிடங்குகள் மட்டுமின்றி விவசாயிகளும் பயன்படுத்த முடியும்.
புற ஊதா கதிர்களால் கவரப்படும் பூச்சிகள், வண்டுகள்
விளக்கின் கீழ்பகுதியில் விழும்போது அதில் உள்ள ரசாயனக் கலவை காரணமாக இறந்து விடுகின்றன.
உணவுப் பொருள்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் பாதுகாப்பான இந்த விளக்குப் பொறிகள் சேவூரில்
உள்ள 10 கிடங்குகளில் வைக்கப்பட்டன. அதேபோல், அரக்கோணத்தில் 11 கிடங்குகளில் வைக்கப்பட்டுள்ளன.
சேவூர் கிடங்குகளில் வைக்கப்பட்ட இந்த நவீன விளக்குப்
பொறிகளின் செயல்பாடடு குறித்து அருகில் உள்ள கிராம மக்களை திங்கள்கிழமை அழைத்து கிடங்கு
மேலாளர் செந்தில்நாதன் விளக்கம் அளித்தார்.
No comments:
Post a Comment