குமரி மாவட்டத்தில் குட்டை ரக தென்னையை அதிக அளவில் பயிரிட வேண்டுமென என தென்னை வளர்ச்சி வாரிய துணை இயக்குநர் பாலசுதாகரி அறிவுறுத்தியுள்ளார்.
கன்னியாகுமரியில் நடைபெற்ற உலக தென்னை தின விழாவில்,
அவர்பேசியதாவது:
இந்தியாவில் விவசாயிகளின் கடின உழைப்பால் ரூ. 7 ஆயிரம்
கோடி தேசிய வருமானமாகவும், ரூ. 500 கோடி அந்நியச் செலாவணியாகவும் ஈட்டித் தந்துள்ள
ஒரு கோடி தென்னை விவசாயிகளும், பதனீட்டாளர்களும் பாராட்டுகளுக்கு உரியவர்கள்.
மனித வாழ்க்கைக்குத் தேவையான உணவு, பானம், எண்ணெய்,
எரிபொருள் மற்றும் உறைவிடம் ஆகிய அனைத்தையும் தென்னை மரம் தருகிறது. அதனால்தான் தென்னை
இயற்கையின் அற்புதமரம் என போற்றப்படுகிறது. தமிழ்நாட்டில் 444 தென்னை உற்பத்தியாளர்
சங்கங்களும், 57 தென்னை உற்பத்தியாளர் இணையங்களும், 6 தென்னை உற்பத்தியாளர் நிறுவனங்களும்
செயல்பட்டு வருகின்றன. குமரி மாவட்டத்தில் மட்டும் 67 தென்னை உற்பத்தியாளர் சங்கங்கள்
உள்ளன. மேலும், இந்த மாவட்டத்தில் மூன்று தென்னை உற்பத்தியாளர் இணையங்கள் உருவாக்கப்பட
உள்ளன. தென்னை விவசாயிகள் எல்லோரும் தென்னை உற்பத்தியாளர் சங்கங்கள் மூலம் தென்னை பொருள்களின்
நன்மைகள் பற்றிய விழிப்புணர்வை பொதுமக்களுக்கு எடுத்துச் செல்ல வேண்டும்.
இம்மாவட்டத்தில் நெட்டை ரக தென்னை அதிகமாக பயிரிடப்படுகிறது.
ஆனால் அதிக பயனைத் தரும் குட்டை ரக தென்னங்கன்றுகளை விவசாயிகள் அதிகளவில் உற்பத்தி
செய்ய வேண்டும் என்றார் அவர். தமிழ்நாடு திட்ட கமிஷன் உறுப்பினரும், தமிழ்நாடு விவசாய
பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தருமான டாக்டர் ராமசாமி சிறப்பு விருந்தினராகப்
பங்கேற்றார்.
விழாவில் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து
சுமார் 200-க்கும் மேற்பட்ட தென்னை விவசாயிகள் கலந்துகொண்டனர். ஈத்தாமொழி தேங்காய்
உற்பத்தியாளர் சங்கத் தலைவர் ரெத்னகரன் நன்றி கூறினார்.
http://www.dinamani.com/edition_thirunelveli/kanyakumari/2015/09/07/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%B0%E0%AE%95-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF/article3013937.ece
No comments:
Post a Comment