Tuesday, September 1, 2015

எண்ணெய் வித்து பயிர்களில் பூச்சி மேலாண்மை வேளாண்துறை ஆலோசனை


பழநி,: ஆமணக்கு, சூரியகாந்தி உள்ளிட்ட எண்ணெய் வித்து பயிர்களில் பூச்சி மேலாண்மை குறித்து வேளாண் துறையினர்  ஆலோசனை வழங்கி உள்ளனர். தமிழகத்தில் சாகுபடி செய்யப்படும் முக்கிய எண்ணெய் வித்து பயிர்களில் நிலக்கடலை, எள், ஆமணக்கு, சூரியகாந்தி ஆகியவை முக்கிய பயிர்களாக விளங்குகின்றன. தமிழகத்தில் சுமார் 5.02 லட்சம் ஹெக்டேர்களில் எண்ணெய் வித்து பயிர்கள் மானாவாரியாகவும், இறவையிலும் சாகுபடி செய்யப்படுகின்றன. எண்ணெய் வித்து பயிர்களில் ஆமணக்கு அதிகளவில் சாகுபடி செய்யப்படுபவை ஆகும்.


தமிழகத்தில் ஆமணக்கு மானாவாரியில் ஏப்ரல்-மே, ஜூன்-ஜூலை, ஜூலை-ஆகஸ்டு பட்டங்கள் மிகவும் உகந்தவை. ஆமணக்கு பயிரிட பாத்தி அமைத்தல், உரமிடுதல், நுண் ஊட்டமிடுதல், ஊட்டச்சத்து கலவை தெளிப்பு, விதை அளவு, விதை நேர்த்தி, களை கட்டுப்பாடு, பாசனம் ஆகியவற்றை வேளாண்துறையினிடம் ஆலோசனை பெற்று அதன்படி கடைபிடித்தால் நல்ல விளைச்சல் பெறலாம்.
 

அதுபோல் பூச்சி மேலாண்மையில் விவசாயிகள் அதிக அக்கறை காட்ட வேண்டும். கோடை மழைக்கு முன் வரப்புகளிலும், நிழலான இடங்களிலும், மண்ணில் புதைந்துள்ள கூட்டுப்புழுக்களை உழவு செய்து வெளிக்கொண்டு வந்து அழிக்க வேண்டும். விளக்குப்பொறி அல்லது தீப்பந்தம் வைத்து தாய் அந்திப்பூச்சிகளைக் கவர்ந்து அழிக்க வேண்டும். பயிர்களில் இடப்பட்டுள்ள முட்டைகளை சேகரித்து அழிக்க வேண்டும். தாக்கப்பட்ட வயல்களைச் சுற்றி 30 சென்டி மீட்டர் ஆழம் மற்றும் 25 சென்டி மீட்டர் அகலத்தில் செங்குத்தாக குழிகள் அமைத்து புழுக்கள் பாதிக்கப்பட்ட வயல்களில் இருந்து பரவுவதை தடுக்க வேண்டும்.

எக்டேருக்கு 25 கிலோ என்ற அளவில் பாசலோன் 4%, கார்பாரில் 10%, பெனிட்ரோதியான் 2% ஆகியவை கலந்து தெளிக்க வேண்டும். 1 எக்டேருக்கு சூடோமோனாஸ் ஃபுளுரசன்ஸ் 2.5 கிலோவுடன், 50 கிலோ மக்கிய தொழுவுரத்தை கலந்து தெளிக்க வேண்டும். மேலும், நோய் தென்படும் இடங்களில் கார்பன்டாசிம் லிட்டருக்கு 1 கிராம் என்ற அளவில் கலந்து தெளித்தால் பூச்சிகளின் தாக்குதல் இருக்காது. இதுதொடர்பான கூடுதல் தகவல்களுக்கு அந்தந்த பகுதி வேளாண் அலுவலர்களையோ அல்லது வேளாண் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என வேளாண்துறையினர் தெரிவித்துள்ளனர்.  

Source: http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=485825&cat=504

No comments:

Post a Comment