Tuesday, September 1, 2015

திருமயம் வட்டாரத்தில் இயந்திரம் மூலம் பயிர்களை நடவுச் செய்வது எப்படி? விவசாயிகளுக்கு பயிற்சி


திருமயம், : இயந்திரம் மூலம் பயிர்களை நடவுச் செய்வது எப்படி? என்பது குறித்து  விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

 புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அடுத்த இளஞ்சாவூர் கிராமத்தில் இயந்திரம் மூலம் நெற்பயிர்களை நடவுச் செய்வது எப்படி? என்பது குறித்த பயிற்சி முகாம் நடைபெற்றது. முகாமுக்கு வேளாண் உதவி இயக்குநர் ராமமூர்த்தி தலைமை வகித்தார் அப்போது அவர் இதுகுறித்து செயல்விளக்கம் அளித்துப் பேசியதாவது: இயந்திரம் மூலம் செய்ய எக்டேருக்கு 2.5 சென்ட் வீதம் பாய் நாற்றங்கால் அமைக்க வேண்டும். மேட்டுபாத்தி நாற்றங்கால் அமைக்கும்போது 15 மீ நீளத்துக்கு 12 மீ அகலம் மற்றும் 7.5. செ.மீ. உயரம் இருக்குமாறு மேடை அமைத்து அதன்மேல் பாலித்தீன் சீட் அல்லது உரச் சாக்கை விரிக்க வேண்டும். 

இயந்திரம் மூலம் நடவுச் செய்ய எக்டேருக்கு 30 கிலோ விதை தேவைப்படும். பூவாளி கொண்டு நீர் தெளிக்க வேண்டும். தண்ணீர் தேங்கி நிற்காமல் வடிந்து விடுவதற்கு ஏதுவாக பாலித்தீன் சீட் அல்லது உரச் சாக்கில் 2 அல்லது 3 துளைகள் இட வேண்டும். நாற்றின் வளர்ச்சி நன்றாக இல்லாவிட்டால் விதைத்த 7வது நாளில் இருந்து 9ம் நாளில் 0.5 சதவீத யூரியா கரைசலை தெளிக்க வேண்டும். விதைத்த 15ம் நாளில் நடவு இயந்திர தட்டின் பரப்பளவுக்கு ஏற்றவாறு பாலித்தீன் சீட்டை வெட்டி  இயந்திரம் மூலம் நடவுச் செய்யலாம். நடவு இயந்திரம் நடவு செய்வதால் கூலியாட்கள் பற்றாக்குறை தவிர்க்கப்படும். இளம் வயது நாற்றுகளை நடவுச் செய்ய பயன்படுத்துவதால் அதிக அளவு சிம்பு வெடித்து தூர் கட்டுவதால் மகசூல் அதிக அளவில் கிடைக்க வாய்ப்புள்ளது என்றார். மேலும், நடவு இயந்திரங்களை குறைந்த வாடகையில் பெற்று நடவுச் செய்வது  குறித்தும் விவசாயிகளுககு எடுத்துரைத்தார்.

அத்துடன் இவ்வாறு இயந்திரம் மூலம் நடவுச் செய்வதை ஊக்குவிக்க தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டம் நெல் குழுமத்தின் கீழ் எக்டேருக்கு ரூ.3 ஆயிரம் வீதம் மானியமாக வழங்குவதை சுட்டிக்காட்டினார். முகாமில் வேளாண் அலுவலர் மகேஸ்வரி, துணை வேளாண் அலுவலர் செல்லப்பா, உதவி விதை அலுவலர்கள் ராஜேந்திரன், சுப்பிரமணியன், உதவி வேளாண் அலுவலர் கிஷோர்குமார் மற்றும் அட்மா அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

அறந்தாங்கி: இதே போல் அறந்தாங்கி அடுத்த எட்டியத்தளி கிராமத்தில் முன்னோடி விவசாயி முத்துராமலிங்கம் வயலில் நடைபெற்ற செயல் விளக்க முகாமுக்கு வேளாண் உதவி இயக்குநர் தியாகராஜன் தலைமை வகித்தார். பெப்சிகோ நிறுவனம் வழங்கிய இயந்திரம் மூலம் 5 ஏக்கர் நிலத்தில் நேரடி நெல் விதைப்பு பணிகளை வேளாண் விரிவாக்க பணியாளர்கள் முகாமிட்டு மேற்கொண்டனர். நிகழ்ச்சியில் வேளாண் உதவி அலுவலர்கள், விவசாயிகள் கலந்துகொண்டனர்.
Source: 

http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=485934&cat=504

No comments:

Post a Comment