விருதுநகர் மாவட்டத்தில் தென்னை மற்றும மாந்தோப்புகளில்
பார்த்தீனியச் செடிகளை கட்டுப்படுத்த விவசாயிகளுக்கு தக்கைப்பூண்டு விதைகளை வேளாண்மைத்துறை
மூலம் விலையில்லாமல் வழங்க இருப்பதாக ஆட்சியர் தெரிவித்தார்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வெள்ளிக்கிழமை
விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஆட்சியர் வே.ராஜாராமன்
தலைமை வகித்தார். வேளாண்மைத்துறை இணை இயக்குநர் கனகராஜன் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் விவசாயிகள் பேசுகையில், தென்னை,
மாந்தோப்புகளில் தக்கைப்பூண்டு விதைப்பதன் மூலம் பார்த்தீனியச் செடிகளை கட்டுப்படுத்தலாம்
என்பதால், இந்த விதைகளை விவசாயிகளுக்கு விலையில்லாமல் வழங்க வேண்டும்.
நவீன வேளாண் கருவிகளை இயக்கத் தேவையான
பயிற்சியை விவசாயிகளுக்கு அளிக்க வேண்டும்.தோட்டக்கலை துறை மூலம் ஓட்டு மாங்கன்றுகள்,
மினி கொய்யா, குழித்தட்டு முறையில் மிளகாய், தக்காளி, கத்தரி போன்ற வீரிய ரக கன்றுகள்
மற்றும் பப்பாளி மரக்கன்றுகள் ஆகியவைகளை குறிப்பிட்ட பருவத்தில் நடுவதற்கு வழங்க வேண்டும்.
கரும்பு விவசாயிகளிடம் கொள்முதல் செய்த நாளிலிருந்து
குறிப்பிட்ட நாள்களுக்குள் பணம் பட்டுவாடா செய்ய வேண்டும். காலதாமதம் ஏற்பட்டால் வட்டித்
தொகை கணக்கிட்டு வழங்க வேண்டும். வேளாண் கருவிகளான டிராக்டர், மினி டிராக்டர், ஆயில்
என்ஜின் மோட்டார் ஆகியவைகளை மானிய விலையில் அளிக்க வேண்டும் என்றனர்.
இதற்கு பதிலளித்து ஆட்சியர் வே.ராஜாராமன் பேசுகையில்,
தக்கைப்பூண்டு விதைகளை விலையில்லாமல் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
விவசாய சாகுபடியை அதிகரிக்கும் வகையில் நவீன வேளாண்மை
கருவிகளை இயக்குவது தொடர்பாக கிருஷ்ணன்கோவில் வேளாண்மை பொறியியல் துறை மூலம் செய்முறை
பயிற்சி அளிக்கப்படுகிறது. இம்மாவட்டத்தில் மழை தொடங்குவகற்கு முன்பே நீர் தேங்கும்
வகையில் கண்மாய்களில் மராமத்து பணிகள் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
தோட்டக்கலைத்துறை மூலம் செயல்முறை பண்ணையம் அமைத்து,
செய்முறை பயிற்சி குறித்த விளக்கம் அளிக்கப்படும். ஏற்கனவே கரும்பு அரவை ஆலைகள் தொகை
வழங்க காலதாமதம் ஆனதால் அதற்கான வட்டியுடன் வழங்க ஆலைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தேசிய கால்நடை அபிவிருத்தி திட்டம் மூலம் 22 ஆயிரம்
அகத்தி, கொடுக்காபுளி, சரக்கொன்றை. பூவரசு ஆகிய மரக்கன்றுகள் தீவனத்திற்கு பயன்படுத்துவதற்காக
மேய்ச்சல் நிலங்களை கண்டறிந்து நடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் முத்துக்குமரன்,
நேர்முக உதவியாளர்(விவசாயம்) செல்வம், விருதுநகர் மாவட்ட வன உயிரின காப்பாளர் அசோக்குமார்,
கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் குருமூர்த்தி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
http://www.dinamani.com/edition_madurai/virudhnagar/2015/09/19/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE/article3035890.ece
No comments:
Post a Comment