Thursday, September 17, 2015

நெல்சாகுபடி முறையில் புதிய தொழில்நுட்ப முறைகள் அறிமுகம்



சர்வதேச நெல் ஆராய்ச்சி நிலையம், வேளாண்மை பல்கலைக்கழகம் இணைந்து நெல் சாகுபடி முறையில் புதிய தொழில்நுட்ப முறைகளை ஆராய்ச்சி செய்து அறிமுகம் செய்துள்ளது. இது தண்ணீர், ஆட்கள் பற்றாக்குறையை சரி செய்ய எளிய வழி ஆகும்.

தானிய முனைப்பு திட்டம்

பிலிப்பைன்சில் உள்ள சர்வதேச நெல் ஆராய்ச்சி நிலையம், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் மற்றும் ஆடுதுறையில் உள்ள நெல் ஆராய்ச்சி நிலையம், தஞ்சை காட்டுத்தோட்டத்தில் உள்ள மண் மற்றும் நீர் மேலாண்மை ஆராய்ச்சி நிலையம் ஆகியவை இணைந்து தெற்காசிய நாடுகளின் தானிய முனைப்பு திட்டம் என்ற பெயரில் நெல் உள்ளிட்ட பயறு வகை சாகுபடி முறையில் புதிய தொழில்நுட்பங்களை காவிரி டெல்டா மாவட்டங்களில் ஆராய்ச்சி செய்து அறிமுகப்படுத்தி உள்ளது.

இது குறித்து சர்வதேச நெல் ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானி நோயல்மேகர், நெல் ஆராய்ச்சி நிலைய இயக்குனர் ரவி, தென்னை ஆராய்ச்சி நிலைய இயக்குனர் ராஜேந்திரன், தெற்காசிய நாடுகளின் தானிய முனைப்பு திட்ட மேலாளர் கணேஷமூர்த்தி ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:-

சர்வதேச நெல் ஆராய்ச்சி நிலையம் தெற்காசிய நாடுகளில் தானிய முனைப்பு திட்டம் என்ற பெயரில் 3 வழிகள் குறித்து காவிரி டெல்டா பகுதியில் கடந்த 2009-ம்ஆண்டு முதல் ஆராய்ச்சி மேற்கொண்டது. இந்த ஆராய்ச்சி இந்த ஆண்டுடன் முடிவடைகிறது. இந்த ஆராய்ச்சி சுமார் 70 ஆயிரம் ஏக்கரில் செயல்விளக்கம் மூலம் செய்து காண்பிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் வளங்களை சேமிக்கும் தொழில்நுட்பமாகும். இந்த திட்டங்களை தமிழ்நாடு பல்கலைக்கழகம் தொடர்ந்து செயல்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளும்.

புழுதியில் நேரடி நெல்விதைப்பு

இந்த ஆராய்ச்சி புழுதியில் நேரடி நெல் விதைப்பு, சேறு இல்லா எந்திர நடவுமுறை மற்றும் லேசர் முறையில் மண்ணை எந்திரம் மூலம் சமன்ளபடுத்தும் முறை ஆகியவை களை கொண்டது.
 

இதில் புழுதியில் நேரடி நெல் விதைப்பு என்பது புழுதி வயலில் டிராக்டரை பயன்படுத்தி நேரடியாக விதை மற்றும் உரம் விதைப்பு செய்வது ஆகும். குறுவை, முன்சம்பா மற்றும் கோடை பருவத்தில் எந்திரத்தை பயன்படுத்தி இந்த விதைப்பு முறையை செய்யலாம்.

இந்த முறைக்கு நீரின் தேவை 45 சதவீதம் குறைகிறது. குறைந்த வேலையாட்கள் போதும். இடுபொருட்கள், விதைகள் குறைந்த அளவே போதும். பூச்சி, நோய் தாக்குதல் குறைகிறது. சாகுபடி செலவு 50 சதவீதம் குறைகிறது. இதற்கு நிலத்தை உழுத பின்னர் லேசர் எந்திரத்தைக்கொண்டு சமன்படுத்த வேண்டும்.

சேறு இல்லா எந்திர நடவு

சேறு இல்லா எந்திர நடவு முறை என்பது குறைந்த தண்ணீரை பயன்படுத்தி நிலத்தை கொக்கி கலப்பை கொண்டு ஒருமுறை உழவு செய்து எந்திரத்தின் மூலம் நடவு செய்வது. இதன் மூலம் 50 சதவீத தண்ணீர் தேவை குறைகிறது. இதற்கு உழவு செலவு, ஆட்கள் செலவு குறைகிறது. நிலத்தை சமன்செய்யக்கூடிய லேசர் எந்திரம் கொண்டு சமன் செய்ய வேண்டும். இந்த முறைகளில் சாகுபடி செய்தால் எக்டேருக்கு 5 டன் வரை மகசூல் கிடைத்துள்ளது.
 

குறைந்த செலவு, குறைந்த தண்ணீர், வேலையாட்கள் பற்றாக்குறை இன்றி இந்த மகசூல் பெறலாம். இதன் மூலம் இளையதலைமுறையினர் விவசாயத்தில் ஈடுபட ஆர்வம் ஏற்படும்.புழுதி முறையில் சாகுபடி திருத்துறைப்பூண்டி பகுதியில் செய்தாலும், அதற்கு அதிக விதைநெல் செலவுசெய்தனர்.
 

தற்போது அதில் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சாகுபடி செய்வது குறித்து இந்த ஆராய்ச்சி செய்யப்பட்டுள்ளது. இந்த எந்திரங்களின் மூலம் நெல் மட்டுமல்லாது மக்காச்சோளம், உளுந்து, சோளம் போன்ற பயறுவகை பயிர்களையும் சாகுபடி செய்யலாம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.
 

http://www.dailythanthi.com/News/Districts/Tanjore/2015/09/17005349/Method-of-paddy-cultivation-New-Technology-Methods.vpf

No comments:

Post a Comment