Thursday, September 17, 2015

அடுக்குமாடி குடியிருப்புகளில் சோலார் பேனல்கள் பொருத்த புதிய விதி



அடுக்குமாடி குடியிருப்புகளில் கண்டிப்பாக சோலார் பேனல்கள் பொருத்த வேண்டும் என முதல்வர் ஜெயலலிதா கடந்த 15ம் தேதி சட்டசபையில் அறிவித்தார். இதையடுத்து வீட்டுவசதி மற்றும் ஊரக வளர்ச்சித்துறையினர், தமிழக மின்வாரியத்துடன் இணைந்து அதற்கான பணிகளில் ஈடுபட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இன்னும் 3 மாதங்களில் முதற்கட்ட பணிகள் முடிவடைந்து, அதற்கான புதிய விதிமுறைகளை அமல்படுத்த உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. 

இதுகுறித்து வீட்டுவசதி மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: அடுக்குமாடி குடியிருப்புகளில் அமைக்க உள்ள சோலார் பேனல்களின் அளவு, அதற்கு தேவையான இடம் மற்றும் உற்பத்தி செய்வதற்கான உள்கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்டவைகள் குறித்து கலந்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. அதற்கான புதிய விதிமுறைகளும் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. தோராய செலவு குறித்தும் கலந்தாலோசிக்கப்பட்டு வருகிறது என்றார்.
 

சோலார் பேனல் அமைக்கும் நிபுணர்கள் கூறியதாவது : உதாரணத்துக்கு, 100 கிலோவாட் சோலார் பேனல் அமைக்கும் பட்சத்தில் தோராயமாக ரூ.70 லட்சம் வரை செலவாகும். சோலார் பேனல்களை பொறுத்தவரை பகல் நேரங்களில் மட்டுமே மின் உற்பத்தி செய்ய முடியும். ஆனால், பெரும்பாலானோர் பகல் நேரங்களில் வீடுகளில் இருக்க மாட்டார்கள். எனவே, அவர்கள் பேட்டரி பேக்அப் வசதி வைத்திருந்தால் மட்டும் தான், சோலார் பேனல்களின் உபயோகம் முழுமையாக இருக்கும். இல்லாவிடில் மாலை நேரங்களில் தமிழக மின்வாரியம் மூலம் வினியோகம் செய்யப்படும் மின்சாரத்தை தான் உபயோகிக்க நேரிடும் என்றார்.
  

http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=167719

No comments:

Post a Comment