Monday, September 21, 2015

ஆகப்போகுது கோவை தாவரவியல் பூங்கா! புதிய முயற்சியில் வேளாண் பல்கலை தீவிரம்



கோவை: கோவை, தமிழ்நாடு வேளாண் பல்கலையில் அமைந்துள்ள தாவரவியல் பூங்காவை மேம்படுத்தி, மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா மையமாக மாற்றும் முயற்சியில், பல்கலை நிர்வாகத்தினர் ஈடுபட்டுள்ளனர்.

வேளாண் பல்கலையில் அமைந்துள்ள தாவரவியல் பூங்கா, 1908ல், கல்லுாரி மாணவர்களின் ஆய்வுக்காக, சாதாரண பூங்காவாக துவங்கப்பட்டது. காலப்போக்கில் விரிவுபடுத்தப்பட்டு, 1965 முதல் தாவரவியல் பூங்காவாக செயல்பட்டு வருகிறது. மொத்தம், 47.5 ஏக்கரில் பரந்து விரிந்துள்ள இப்பூங்காவில், உள்நாடு மற்றும் வெளிநாட்டை தாயகமாக கொண்டுள்ள மரங்கள்,
தாவரங்கள், மலர்கள், அழகு செடிகள் என, 800க்கும் மேற்பட்ட ரகங்கள், 100க்கும் மேற்பட்ட வகைகளில் இடம் பெற்றுள்ளன.

பூங்காவில், மலரியல், நில எழிலுாட்டும் துறை, மருந்து, நறுமண பயிர்கள் துறை, விவசாயிகள் அலுவலகம், வாசனை மெழுகு தயாரிப்பு கூடம் உள்ளிட்டவையும் இயங்கி வருகின்றன. தமிழக அரசு மற்றும் இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்திடம் இருந்து நிதி பெற்று, பூங்கா பராமரிப்பிற்கென பல்கலை வழங்குகிறது. சுற்றுலா பயணிகளை ஈர்ப்பதற்காக, பூங்கா நுழைவாயில்களிலுள்ள, அழகுச்செடிகள், ஐந்து ஆண்டுக்கு ஒரு முறை மாற்றப்படுகின்றன.

உதிரி பூக்கள் ஆராய்ச்சி
பூங்காவினுள், 7.5 ஏக்கர் நிலம், ஆராய்ச்சி மற்றும் உதிரி பூக்கள் சாகுபடிக்காக பயன்படுத்தப்படுகிறது. இதில், ஒவ்வொரு பருவ காலத்துக்கும் ஏற்றபடி பூ ரகங்கள் சாகுபடி செய்யப்பட்டு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மூலிகை செடி நாற்று தயாரிப்பு
இரண்டரை ஏக்கரில், மருந்து மற்றும் நறுமண பயிர்கள் துறை சார்பில், மூலிகை செடிகளின் தொகுப்பு, பெயர் பதிவுடன் வைக்கப்பட்டுள்ளது. செடிகளின் நாற்றும் இங்கு உற்பத்தி செய்யப்படுகின்றன. இவை விற்பனைக்காக, வேளாண் பல்கலை, செடிகள் விற்பனை நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.

அதிசய பனை மரம்
'ஹைப்பேன் தெபிக்கா' எனும் அடிபாக கிளைகளுடன் வளரும் இயல்புடைய அபூர்வ பனை மரம், கோவையில் இங்கு மட்டுமே உள்ளது. ஆராய்ச்சிக்காக, திபெத்திலிருந்து, 30 ஆண்டுக்கு முன் கொண்டு வரப்பட்டது, இந்த மரம். அடிபாகத்திலிருந்து கிளையாக வளர்ந்து காணப்படுவதால், சுற்றுலா பயணிகளை ஈர்ப்பதில் இது முக்கிய பங்கு வகிக்கிறது.

சிறப்பு
பூங்காவில், ஒரே ஒரு அசோக மரம் உள்ளது. ஒவ்வொருவரின் ராசிக்கு ஏற்ற தாவரங்கள் மற்றும் ஒவ்வொரு பூவும் அது கூற வரும் பொருளும் ஆகியவை அச்சிடப் பட்ட போர்டுகள் வைக்கப்பட்டுள்ளன. இதை, பூங்காவுக்கு வரும் சுற்றுலா பயணிகள் அனைவரும் விரும்பி பார்க்கின்றனர்.

வயது, 107
கடந்த, 1908ம் ஆண்டிலிருந்து பூங்கா இயங்கி வருகிறது. ஆனால், தாவரவியல் பூங்கா என பெயர் சூட்டப்பட்டு, 50 ஆண்டுகளே ஆகின்றன. மலரியல், நிலஎழிலுாட்டும் துறை தலைவரும், பூங்கா மேலாளருமான கண்ணன் கூறுகையில், ''ஆண்டுதோறும் இங்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. வெளிநாட்டினர் கூட வருகின்றனர். பூங்காவை இன்னும், நவீன முறையில், மேம்படுத்தி, பராமரிப்பு செய்வதற்கான ஏற்பாடுகள் நடக்கின்றன.
''பூங்காவை, மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா மையமாக, குழந்தைகள் முதல் பெரியவர் வரை, அனைவருக்கும் இனிமையான பொழுதுபோக்கு அனுபவத்தை வழங்குமிடமாகவும் மாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம்,'' என்றார்.

http://www.dinamalar.com/district_detail.asp?id=1345709

No comments:

Post a Comment