வாலாஜாபாத்: இயற்கை பசுந்தாள்
உர விதைகளுக்கு பதிலாக, நடப்பாண்டில் இருந்து, விதைப்பு மானியமாக, ஒரு ஏக்கருக்கு,
800 ரூபாய் வழங்க, வேளாண் துறை முடிவு செய்து உள்ளது. இதற்காக, மாவட்டம் முழுவதும்,
6,323 ஏக்கருக்கு மானியம் வழங்க, 50.58 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு
உள்ளது. கடந்த 30 ஆண்டுகளுக்கு முன், காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்கள்
ஒன்றாக இருந்தபோது, 4.5 லட்சம் ஏக்கரில், விவசாயிகள் நெல் பயிரிட்டு வந்தனர்.
இயற்கை உர ஊக்குவிப்பு
அப்போது, அதிக அளவில், இயற்கை
உரங்களின் பயன்பாடு நடைமுறையில் இருந்து வந்தது.
தற்போது, ரசாயன உரங்களின் வரத்து
அதிகரிப்பால், தழைச் சத்து கொடுக்கும் இயற்கை உரங்களை வயலில் இடும் வழக்கம் குறைந்து
விட்டது. மேலும், நடவு காலம் முதல் அறுவடை காலம் வரை, ரசாயன உரங்களையே விவசாயிகள் பயன்படுத்துவது
அதிகரித்து வருகிறது.
தற்போது, ரசாயன உரங்களின் பயன்பாட்டை
குறைத்து, இயற்கை உரங்களை ஊக்குவிப்பதற்கு வேளாண் துறை திட்டமிட்டு உள்ளது. இதற்காக,
பசுந்தாள் உர விதைகளான சணப்பு மற்றும் தக்கைப்பூண்டு ஆகிய தழைச்சத்து உரங்களை, தரிசு
நிலங்களில் விதைக்க, இதுவரை வழங்கி வந்த பசுந்தாள் எரு விதைக்கு பதிலாக, ஒரு ஏக்கருக்கு
800 ரூபாயை மானியமாக வழங்க, முடிவு செய்து உள்ளது.
இந்த மானியத்தை பெற, அந்தந்த
வட்டார வேளாண் உதவி அலுவலர்களிடம், பசுந்தாள் எரு விதைப்பு செய்த வயலின் புகைப்படம்;
அரசுடைமை வங்கியில் உள்ள வங்கி கணக்கு எண் ஆகியவற்றை சமர்ப்பித்தால், மானியம் வழங்கப்படும்
என, அறிவிக்கப்பட்டு உள்ளது.
நிபந்தனைகள்
மானியம் பெற விண்ணப்பிக்கும்
விவசாயி, கடந்த ஆண்டு மானியத்தில் வழங்கப்பட்ட பசுந்தாள் உர விதைகளை பெற்றிருக்கக்
கூடாது.
இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும்
விவசாயிக்கு, கட்டாயமாக வங்கி கணக்கு இருக்க வேண்டும்.
வேளாண் உதவி அலுவலர் பரிந்துரையுடன்,
வயலின் புகைப்படத்தை சமர்ப்பிக்க வேண்டும்.
இதுகுறித்து, வேளாண் துறை இணை
இயக்குனர் சீதாராமன் கூறியதாவது: கடந்த ஆண்டு வரை, பசுந்தாள் உர விதைகளை வேளாண் துறை,
மானியத்தில் வழங்கி வந்தது. நடப்பு ஆண்டில் இருந்து, விதை வழங்குவதை தவிர்த்து, ஏக்கருக்கு,
800 ரூபாயை விதைப்பு மானியமாக வழங்க, முடிவு செய்து உள்ளது.
இதற்காக, மாவட்டம் முழுவதும்,
6,323 ஏக்கருக்கு மானியம் வழங்க , 50.58 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு
உள்ளது. இந்த நிதியை, அந்தந்த வட்டார வேளாண் விரிவாக்க மையங்களுக்கு அனுப்பி, விதைப்பு
செய்யப்படும் சாகுபடிக்கு ஏற்றவாறு பகிர்ந்தளிக்கப்படும்.
இவ்வாறு, அவர் கூறினார்.
No comments:
Post a Comment