Thursday, September 3, 2015

தேசிய வேளாண் திட்டத்தில் 50% மானியத்தில் உரம்



மோகனூர்: "தாலுகாவுக்கு உட்பட்ட பகுதிகளில் நெல் மற்றும் பல்வேறு பயிர்களை பயிரிட்டுள்ள விவசாயிகளுக்கு, வேளாண்மை விரிவாக்க மையத்தில் தேசிய வேளாண் வளர்ச்சி (எண்ணெய் வித்து) திட்டத்தின் கீழ், அசோஸ்பைரில்லம், ரைசோபியம், பாஸ்போபாக்டீரியா உள்ளிட்ட உயிர் உரங்கள், 50 சதவீதம் மானிய விலையில் கிடைக்கிறது' என, மோகனூர் வேளாண்மைத்துறை உதவி இயக்குனர் கந்தசாமி தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்ட அறிக்கை: மோகனூர் தாலுகாவுக்கு உட்பட்ட பகுதிகளில் நெல், பயறு, சிறு தானியங்கள், பருத்தி உள்ளிட்ட பயிர்கள் அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இப்பயிர்களில் லாபம் சம்பாதிக்க உயிர் உரங்களான அசோஸ்பைரில்லம், ரைசோபியம், பாஸ்போபாக்டீரியா போன்ற உயிர் உரங்களை பயன்படுத்தலாம். இந்த உரங்கள் பயிர்கள் தழைச்சத்தை நிலை நிறுத்தவும், மணிச்சத்தை பயிர்கள் எடுத்துக்கொள்ளக்கூடிய வகையில் மாற்றித் தரும் பணிகளை செய்கிறது. நெல், பயறு வகைப்பயிர்கள், சிறுதானியங்கள், பருத்தி, கரும்பு, காய்கறிப் பயிர்கள் மற்றும் இதர தோட்டப் பயிர்களுக்கும் இந்த உரங்கள் சிறந்த பலனளிக்கின்றன. வேளாண்மையில் உயிர் உரங்கள் முக்கியமான இடுபொருளாகப் பயன்படுகின்றன. பயிர் வளர்ச்சி மற்றும் விளைச்சலை அதிகப்படுத்துவது மட்டுமின்றி, மண் வளத்தை மேம்படுத்தி, மண்ணின் நலத்தை காக்கின்றன. மேலும், நீர்ம அசோஸ்பைரில்லம் பயிருக்கு பச்சை நிறத்தை அளித்து, பயிர் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. நீர்ம பாஸ்போபாக்டீரியா மணிச்சத்தை பயிர்கள் எடுத்துக்கொள்ளக்கூடிய வகையில் மாற்றித் தரும் பணியை செய்கிறது. சில பூஞ்சான எதிர்ப்பு பொருட்களை உற்பத்தி செய்து அவைகளின் வளர்ச்சியைத் தடுத்து பயிர்களைப் பாதுகாக்கிறது. வேளாண்மை விரிவாக்க மையத்தில் தேசிய வேளாண் வளர்ச்சித் (எண்ணெய் வித்து) திட்டத்தின் கீழ், 50 சத மான்ய விலையில் கிடைக்கிறது. இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment